தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ள எடப்பாடி கே.பழனிச்சாமி (வயது 64) சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்.
இவரது தந்தை பெயர் கருப்பா கவுண்டர், தாயார் பெயர் தவசியம்மாள். எடப்பாடி கே.பழனிச்சாமியின் மனைவி பெயர் ராதா. இந்த தம்பதிக்கு மிதுன்குமார் என்ற ஒரு மகன் உள்ளார்.
1974-ம் ஆண்டு சிலுவம்பாளையம் கிளை செயலாளராக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய பழனிச்சாமி 1985-ம் ஆண்டு எடப்பாடி ஒன்றியம் முழுவதும் ஜெயலலிதா பெயரில் தனிக்கொடிக்கம்பங்கள் அமைத்து ஜெ.பேரவை தொடங்கினார்.
1990-ம் ஆண்டு சேலம் வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளராகவும்,1991 சேலம் வடக்கு மாவட்ட செயலாளராகவும், 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் கழக கொள்கை பரப்பு செயலாளராகவும், 2014-ல் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராகவும், தற்போது தலைமை நிலைய செயலாளர் மற்றும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.
1989-ம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991 முதல் 1996 வரை எடப்பாடி சட்ட மன்ற உறுப்பினர். 1998 முதல் 1996 வரை திருச்செங்கோடு தொகுதி எம்.பி.யாக இருந்தார். சேலம் மாவட்ட திருக்கோவில்களின் வாரிய தலைவராகவும், சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவராகவும், தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசன் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
பின்னர் 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளிலும் எம்.எல்.ஏ.வாக அவர் தேர்வு செய்யப்பட்டார். இதில் 2011-ம் ஆண்டு முதல் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பதவியேற்ற அவர் தற்போது வரை அந்த பதவியில் நீடித்து வந்தார்.