பஷில் ராஜபக்ஷ தலைமையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெற்றிக் கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது.
தேர்தலில் ஆளும்கட்சி தனித்தே போட்டியிடும் என்றும் கட்சியின் தனித்துவத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
தேர்தலை பிற்போட வேண்டிய தேவை பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது என்றும் வெற்றியோ, தோல்வியோ உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு பொதுஜன பெரமுன பிறிதொரு அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைத்து, பொது சின்னத்தில் போட்டியிடுவதாக வெளியாகிய செய்திகள் அடிப்படையற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் நாட்களில் பொதுஜன பெரமுன கூட்டணியில் உள்ள பங்காளிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார். (நன்றி கேசரி)