- இங்கிலாந்து அணி 275 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சை இழந்தது.
- 3 ஆம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அந்நாட்டு அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 281 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 79 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து நேற்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது அந்த அணி 275 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சை இழந்தது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 108 ரன்கள் குவித்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 41 ரன் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக அப்ரார் அகமது 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஜாவித் மகமூத் 3 விக்கெட்களை சாய்த்தார்.
இதையடுத்து 355 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. அந்த அணியின் அப்துல்லா சபிக் 45 ரன்னும், ரிஸ்வான் 30 ரன்னும் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். பாபர் ஆசம் 1 ரன்னுடன் பெவிலியன் திரும்பினார்.இமாம் உல் ஹக் 60 ரன்கள் குவித்தார். சவுத் ஷகில் 54 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார்.
பாகிஸ்தான் அணி 3 ஆம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 157 ரன்கள் மட்டுமே தேவை. கைவசம் இன்னும் 6 விக்கெட்கள் உள்ளன. இரண்டு நாள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில், இங்கிலாந்து பந்து வீச்சை சமாளித்து பாகிஸ்தான் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்புடன் அந்நாட்டு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.