ஆப்பிள் நிறுவன ஐபோன்கள் அதன் கேமராவுக்கு உலகம் முழுக்க மிகவும் பிரபலமாக இருக்கிறது.
இந்த நிலையில், ஐபோன்களில் பயன்படுத்தப்படும் கேமரா சென்சார் பற்றிய புது தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஐபோன் மற்றும் இதர ஆப்பிள் நிறுவன சாதனங்களில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களை உற்பத்தி செய்வோர் விவரங்கள் எப்போதுமே ரகசியமாக வைக்கப்படும், இதே நிலை அவற்றின் தொழில்நுட்ப விவரங்களுக்கும் பொருந்தும். இந்த நிலையில், சோனி நிறுவன ஆலைக்கு ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் சென்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மேலும் இது சந்தையில் மிகவும் அரிதான காரியமாகவும் பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் மற்றும் சோனி நிறுவனங்கள் நீண்ட காலமாக இணைந்து செயல்படுவதாக பலமுறை தகவல்கள் வெளியாகி வந்துள்ளன. எனினும், இதுபற்றி இரு நிறுவனங்களும் தொடர்ந்து மௌனம் காத்து வந்தன. இந்த நிலையில், ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் உண்மையை வெளிப்படையாக தெரிவித்து விட்டார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சோனி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக டிம் குக் தெரிவித்தார்.
இத்துடன் சோனி நிறுவன தலைமை செயல் அதிகாரி கெனிசிரோ யோஷிடாவுடன் இருக்கும் புகைப்படத்தை டிம் குக் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் சோனி உற்பத்தி ஆலையில் எடுக்கப்பட்டதாக டிம் குக் குறிப்பிட்டு இருக்கிறார். பேட்டரி, சிப் மற்றும் டிஸ்ப்ளே உள்ளிட்டவைகளை யார் உற்பத்தி செய்கிறார்கள் என்ற விவரத்தையும் ஆப்பிள் மர்மமாகவே வைத்திருக்கிறது. எனினும், வினியோக துறையை சார்ந்தவர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் முன்புறம் மற்றும் பின்புற கிளாஸ் ஷீட்களை கார்னிங் நிறுவனம் உற்பத்தி செய்வதாக தெரிவித்துள்ளனர்.
இதே போன்று சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் பெரும்பாலான OLED பேனல்களை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன. ஆப்பிள் பயன்படுத்தும் சிப்செட்களை TSMC உற்பத்தி செய்து கொடுக்கிறது. சோனி மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இடையே கேமரா ஹார்டுவேர் பற்றிய ஒப்பந்தம் அதன் தோற்றத்தை பொருத்து இதுவரை உறுதுப்படுத்தாமலேயே இருக்கிறது. மேலும் இது பற்றிய உறுதியான தகவல் வெளியாக மேலும் சில காலம் ஆகும் என்றே கூறப்படுகிறது.
இது தவிர சோனி நிறுவனம் செமிகண்டக்டர் தொழில்நுட்பங்களை கொண்டு புது சென்சார் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த சென்சார் அதிகம் மற்றும் குறைந்த வெளிச்சத்தை அனுமதிக்கும் திறன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த சென்சார் நிச்சயம் எதிர்கால ஐபோன் மாடல்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.