இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் தற்போது ‘2018’ என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி உள்ளார்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மலையாளத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நடித்து வரவேற்பை பெற்ற ‘ஓம் சாந்தி ஓசானா’, மற்றும் ‘ஒரு முத்தஸி கதா’, ‘சாராஸ்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கி வரவேற்பை பெற்றவர் இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசப். இவர் தற்போது ‘2018’ என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிப் அலி, வினீத் சீனிவாசன், அபர்ணா பாலமுரளி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் மம்முட்டி பேசியதாவது, ”டைரக்டர் ஜூட் ஆந்தனி தலையில் முடி இல்லா விட்டாலும் அவருக்கு அதிகமான மூளை இருக்கிறது. டிரைலர் சிறப்பாக உள்ளது” என்றார்.
இதையடுத்து சமூக வலைதளத்தில் ஒரு மூத்த நடிகர், இயக்குனரை உருவக்கேலி செய்து பேசுவதா? என்று பல எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து நடிகர் மம்முட்டி மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “இயக்குனர் ஜூட் ஆந்தனி பாராட்டும்போது பேசிய வார்த்தைகளால் சிலர் புண்பட்டு இருப்பதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். இதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பு இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசப், நடிகர் மம்முட்டியை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்றும் என் தலையில் முடி இல்லை என்று எனக்கோ என் குடும்பத்தாருக்கோ வருத்தம் இல்லை என்றும் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.