குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆண் – பெண் இருவருக்கும் சம வாய்ப்பு இருப்பதை இப்போது சமூகம் உணர்ந்திருக்கிறது. குழந்தை பெறக்கூடிய உயிரணு இல்லாதது ஆண் தரப்பிலும், கருவை சுமந்து பிரசவிக்கும் திறன் இல்லாதது பெண் தரப்பிலும் ஏற்படக்கூடிய பிரச்சனை.
இந்த பிரச்சனையால் பிரிவு, இறப்பு, மனநிலை பாதித்தல் என இருந்த நிலைமை இப்போதில்லை. காரணம்… அபார மருத்துவ வளர்ச்சி. சரியான சிகிச்சை, திறமையான மருத்துவர், உறுதியான நம்பிக்கை இருந்தால் எந்த தம்பதியும் குழந்தை பெற முடியும் என நிரூபணம் ஆகியிருக்கிறது.
குழந்தையின்மைக்கு ஆண் – பெண்ணின் பொதுவான காரணம் இது என்றாலும், அதற்கு பல வகையான காரணங்கள் இருக்கின்றன.
பெண்களுக்கு:
1. கருப்பை உட்சுவர் வளர்ச்சி (எண்டோமீட்டியாசிஸ்)
2. கருக்குழாய் அடைப்பு (பெலோபியன் ட்யூப் பிளாக்)
3. கரு முட்டை உருவாகாதது அல்லது சரியான வளர்ச்சி இல்லாத கரு முட்டை.
4. கருப்பை வாயில் தோன்றும் சளித்திரவம் விந்தணுவை கொன்று விடுவது.
5. கர்ப்ப காலத்தை முழுமை பெறச் செய்யத் தேவையான ஹார்மோன் சுரக்காதது.
6. பெண்ணின் வயது (34க்கு மேல் கரு முட்டை வாய்ப்பு குறையும்)
ஆண்களுக்கு:
1. குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை.
2. மது, புகையிலை பொருட்கள், மோசமான உணவு முறையால் விந்தணு குறைபாடு.
3. துணையின் கருமுட்டை வெளியாகும் காலத்தில் சேராமல் இருப்பது.
4. உயிரணுக்களின் நகரும் சக்தி குறைவு (மொபிலிடி)
5. உயிரணுவை கொல்லும் புரதங்கள் அதிக சேர்க்கை.
6. உயிரணு வெளியேற்ற பாதையில் அடைப்பு.
7. விதை வளர்ச்சியின்மை.
8. விதைப் பையில் விபத்து, காயம் காரணமாக உயிரணு உற்பத்தி தடை.
9. விரைவீக்கம், காசநோய்.
10. அதிக வெப்பம், காற்று போகாத ஆடைகள்.
சிகிச்சை முறைகள்:
செயற்கை கருத்தரிப்பு:
பரிசோதனைக் குழாய் முறை (டெஸ்ட்யூப் பேபி) எனப்படும் இதில் உயிரணு, கருமுட்டை இயற்கையான உறவில் சேர்ந்து கரு உருவாகாத சூழலில், அவற்றை வெளியே எடுத்து ஆய்வக குழாயில் வைத்து கருவாக்கப்படுகிறது. பிறகு பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி குழந்தை வளரச் செய்யப்படுகிறது. 80ம் ஆண்டுகளில் வெற்றி பெற்று வரவேற்பை பெற்ற இந்த சிகிச்சை முறை இப்போது பரவலாக நடக்கிறது.
வாடகை தாய்:
தம்பதிகளின் உயிரணு – கருமுட்டை சரியாக இருந்தும் கருவை சுமக்கும் திறன் பெண்ணுக்கு இல்லாமல் போனால் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவது அதிகரித்துள்ளது. இதற்கு சட்ட அங்கீகாரமும் உள்ளது. அதன்படி, தம்பதியினரின் கருமுட்டை – உயிரணு சேர்த்த கருவை வாடகை தாயின் கருப்பையில் செலுத்தி பிரசவ காலம் முழுவதும் கவனித்து மருத்துவ உதவிகள் அளித்து குழந்தை பெறப்படுகிறது.
அதற்கான ஊதியம் பெற்றதும் வாடகை தாயின் பணி முடிகிறது. தன் வயிற்றில் பிறக்காமல் போனாலும் முற்றிலும் அந்தக் குழந்தை தம்பதியுடையதுதான்.சரி, இதையும் தாண்டி சிகிச்சை முறைகள் இருக்கின்றன. மலட்டு தன்மையை நீக்க பல சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
கருமுட்டை உருவாக்கம் (ஓவலேஷன் இண்டக்ஷன்):
ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை கொண்ட பெண்களுக்கான சிகிச்சை இது. இந்த ஹார்மோன் மருந்துகளால் கருமுட்டை உருவாக்கம் தூண்டப்பட்டு முழுமையான கருமுட்டை உருவாகச் செய்யும். இதன்மூலம் இயற்கையாக தம்பதியினர் குழந்தை பெற வழி ஏற்படும்.
செயற்கை விந்தளித்தல்(ஆர்டிபிஷியல் இன்செமினேஷன்):
இந்த முறையில் ஆணிடம் பெறப்படும் விந்தணுகளை சுத்தப்படுத்தி தரமான, உயிரோட்டமுள்ள, நகரும் தன்மை கொண்ட உயிரணுக்களை பெண்களின் கர்ப்ப பாதையில் செலுத்துவதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கப்படும்.இதில் விந்து திரவத்தின் தேவையற்ற, ரசாயன பொருட்கள் நீக்கப்படுவதால் உயிரணுக்களின் முன்னேறும் தன்மை கூடும்.
மலட்டுத்தன்மையை நீக்கும் மருந்துகளும் இந்த சிகிச்சையில் உதவும்.குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு இப்படி நவீன முறைகளில் எளிதாக சிகிச்சை அளிக்க இப்போது நம்நாட்டில் பல மருத்துவமனைகள் உள்ளன.