பிரபல இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் படம் `வணங்காமுடி’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று முன்தினம் துவங்கியது. `புதையல்’ படத்திற்கு பிறகு 20 வருடங்களுக்குப் பிறகு செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி மீண்டும் நடிக்கிறார். இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி உள்ளிட்ட 3 நாயகிகள் நடித்து வருகின்றனர்.
முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, ஹாசினி, ஹரிஷ் உத்தமன், ராஜ் கபூர், நாகி நீடு, ரமேஷ் பண்டிட் OAK, சுந்தர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்திலிருந்து தான் விலகியுள்ளதாக டேனியல் பாலாஜி அறிவித்துள்ளார்.
டேனியல் பாலாஜி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் `இப்படை வெல்லும்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்து பிறகு `வணங்காமுடி’-யில் நடிக்க இருந்தநிலையில், `வணங்காமுடி’ படப்பிடிப்பு முன்னதாகவே தொடங்கியதால் அப்பபடத்தில் நடிக்க முடியதா சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
`வணங்காமுடி` படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைக்கிறார். மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.