பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் (Big match) குழப்பம் விளைவிக்கும் மாணவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், பிக் மெட்ச் நடைபெறும் காலப்பகுதியில் மோதல்களில் ஈடுபடும், கலகம் விளைவிக்கும் மற்றும் குழப்பங்களைச் செய்யும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெறும் இந்தப் பருவ காலத்தில் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒழுக்கயீனமாகவும் நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்காதும் செயற்படும் மாணவர்களை கைது செய்யுமாறு நாட்டின் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளின் பிரதான பாடசாலைகளுக்கு இடையில் கிரிக்கட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு இடையில் மோதல்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு உண்டு.
மோதல்கள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் பாடசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாடசாலை கிரிக்கெட் போட்டிகளுக்கான பிரச்சார நோக்கில் பணம் திரட்டும் மாணவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு மது அருந்துகின்றனர்.
இவ்வாறு ஒழுக்கயீனமாக செயற்படும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.