மனித உடலில் முக்கியமான உறுப்புகளில் ஒன்று வயிறு. உண்ணும் உணவை உடைத்து செரிக்கச் செய்வதும், உணவிலுள்ள சத்துகளை கிரகித்து உடலுக்கு வழங்கும் முக்கிய பணியிலும் வயிறு ஈடுபடுகிறது.
* வெறும் இரைப்பை மட்டும் வயிறு அல்ல. சிறு குடல், பெருங்குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்ற அனைத்தும் சேர்ந்ததே வயிறு ஆகும். சில விலங்கினங்களில் வயிற்று பகுதியில் கூடுதல் துணை உறுப்புகள் சேரும். சில விலங்கினங்களுக்கு வயிறு பல பகுதிகளாக பிரிந்து காணப்படும். உதாரணமாக மாடு போன்ற அசைபோடும் விலங்கினங்களுக்கு வயிறு 4 பகுதிகளாக பிரிந்திருக்கும்.
* குண்டு மனிதர்களுக்கு பெரிய வயிறும், சிறிய உருவம் உள்ளவர்களுக்கு சின்ன வயிறும் இருக்கும் என்று நினைப்பது தவறு. எல்லோருக்கும் வயிறு ஒரே அளவுடையதுதான். இளம்பருவத்தை அடைந்த ஒருவரின் வயிறு 1.5 லிட்டர் கொள்ளவுள்ள உணவு பிடிக்கும்.
* வயிறு முதல் பணியாக தற்காப்பு வேலையுடனே தனது பணியைத் தொடங்குகிறது. அதாவது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் காரணிகளை முதலில் அப்புறப்படுத்துவதே வயிற்றின் முக்கியப்பணி. இரைப்பையில் உள்ள ரசாயனமான ஹைட்ரோகுளோரிக் அமிலம் சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகும். இதனால் உணவுப் பொருட்களில் இருக்கும் பெரும்பாலான கிருமிகள் வயிற்றுப் பகுதியில் கொல்லப்பட்டு விடுகின்றன. உணவுப் பொருட்களை உடைத்து துகள்களாக சிதைக்கவும் இந்த அமிலம் பெரிதும் துணை புரிகிறது.
* நீங்கள் வெட்கப்படும்போது முகம் மட்டும் சிவப்பதில்லை, வயிறும் சிவந்து போகிறது.
* வயிறு என்று நாம் நினைக்கும் இரைப்பையில் மட்டும் உணவு செரிக்கப்படுவதில்லை. அங்கே அரைத்தல் பணி மட்டுமே நடைபெறுகிறது. இரைப்பை, உணவுப் பொருட்களை உடைத்து கெட்டியான பாகு போல சிறுகுடலுக்கு கடத்தும். அங்கேதான் செரித்தலின் பிற பணிகள் நடக்கின்றன.
* நாம் சாப்பிடும் உணவு, நேரடியாக உணவுக்குழலில் இருந்து வயிற்றுக்குள் விழுந்துவிடுவதாக நினைக்க வேண்டாம். உணவுக்குழலில் அலையியக்க முறையில் மெதுவாகவே உணவு நகர்ந்து செல்லும். ‘பெரிஸ்டால்சிஸ்’ எனப்படும் இந்த நிகழ்வு மூலம் இரைப்பைக்கு முன் உள்ள சிறு துளை வழியாக உணவு மெல்ல மெல்ல இரைப்பைக்குள் தள்ளப்படுகிறது. இப்படி உணவுக்குழலில் நிற்கும் உணவுதான் நெஞ்சுக்குள் நிற்பதுபோல, நெஞ்சுகரிப்பதுபோல உணர்கிறோம். அந்த உணவை கீழ் இறக்குவதற்காக அதிகமாக தண்ணீர் பருகுவோம்.
* வயிற்றில் சிறு சலனம் ஏற்படுவதுபோல உணர்வது பாதிப்பின் அறிகுறியல்ல. சாதாரண செரித்தலின் ஒரு நிகழ்வுதான். வயிறு காலியாக இருக்கும்போதும், வேறு சில அறிகுறிகளுடனும் சலனம் தென்பட்டால் பாதிப்புகளை குறிக்கும்.
* வயிற்றுத் திரவமான ஹைட்ரோகுளோரிக் அமிலம், அரிக்கும் தன்மை உடையது. உணவுப் பொருட்களுடன் உலோக துணுக்குகள், எலும்புத்துகள்கள் கலந்து சென்றாலும் அதை அரித்துச் சிதைத்துவிடும் திறன் இதற்கு உண்டு. தொழிற்சாலைகளிலும்கூட உலோகத் துரு அகற்ற இதே ரசாயனத்தையே பயன்படுத்துகிறார்கள். நமது இரைப்பை ஒவ்வொரு நாளும் 3 லிட்டர் செரிமான திரவத்தை சுரக்கிறது.
* நாம் சாப்பிடும்போது உணவுடன், காற்றையும் விழுங்கும் வாய்ப்பு உள்ளது. இந்த காற்று இரைப்பை மற்றும் குடல்பகுதியில் பயணிக்கும்போது ஏற்படும் தடைகளை அகற்றவே ஏப்பம் ஏற்படுகிறது.
* நீங்கள் எந்த மாதிரியான உணவு உண்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. எவ்வளவு பசியுடன் உண்கிறீர்கள் என்பதே முக்கியமானது. சர்க்கரைப் பொருள் அதிகமாக உள்ள உணவு வேகமாக செரித்துவிடும். அதிக பசியாகத் தெரிந்தால் இனிப்புள்ள உணவுப் பண்டங்களை சாப்பிடலாம். அதிக புரதம் மற்றும் கொழுப்புள்ள உணவுகள் மெதுவாகவே ஜீரணமாகும். நீண்ட நேரம் சாப்பிடாமல் வேறு பணி செய்ய வேண்டியிருந்தால் இது மாதிரியான உணவுகளை உண்ணலாம்.
* இளம் ஆண்களின் சிறுகுடல் 6.8 மீட்டர் நீளமும், பெண்களின் சிறுகுடல் 7.1 மீட்டர் நீளமும் இருக்கும்.
* மிகப்பெரிய வயிறு கொண்ட உயிரினம் நீலத்திமிங்கலம்தான். இதன் வயிறு 2200 பவுண்டு (சுமார் ஆயிரம் கிலோ) எடையுள்ள உணவு பிடிக்கும் கொள்ளளவு கொண்டது. இதன் உணவுக்குழல் ஏறத்தாழ ‘பீரோ’ அளவுடைய குகைபோல நீண்டுகொண்டே செல்லும்.
* நெஞ்சு எரிச்சல், ஏப்பம், விக்கல், குடல்புண் (அல்சர்), பித்தப்பை கல், பித்தப்பை மஞ்சள்காமாலை, குடல் இறக்கம், மலச்சிக்கல், செரிமானக் கோளாறு, வயிற்றோட்டம், மூலம், இரைப்பை புற்றுநோய் என வயிறு தொடர்பான நோய்கள் ஏராளம் உள்ளன. பெரும்பாலான பாதிப்புகளுக்கு சிகிச்சை முறைகள் இருக்கின்றன.