பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர், கொழும்பில் பட்டப்பகலில் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் தீவிரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான முக்கியமான அறிக்கை இன்று(20.12.2022) குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
கைரேகைகளின் அறிக்கை
இதற்கமைய கொலைசெய்யப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கை, கால்கள் கட்டப்பட்டு ஆபத்தான நிலையில் விட்டுச் செல்லப்பட்ட இடத்திலும் சடலத்திலும் பதிந்திருந்த கைரேகைகளின் அறிக்கை இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
கார் மற்றும் அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட கைரேகைகள் தற்போது பகுப்பாய்வு செய்யப்பட்டு, குற்றப் பதிவுப் பிரிவில் உள்ள குற்றவாளிகளின் கைரேகைகளுடன் பொருத்தப்படவுள்ளது.
தீவிரமடையும் விசாரணைகள்
இதேவேளை,படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் இறுதிக் கிரியைகள் நேற்று முன்தினம் பொரளை மயானத்தில் இடம்பெற்றன.
இதனை தொடர்ந்து தினேஷ் ஷாப்டரின் குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படும் என குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பல புதிய தகவல்கள் வெளிவரும் நிலையில் தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்ட இடத்திலும் சடலத்திலும் பதிந்திருந்த கைரேகைகளின் அறிக்கை இன்று வெளிவருவது முக்கியமான விடயமாக கருதப்படுகின்றது.