- பசித்திருக்கும் ஒருவர் கேட்ட பின் ஏதாவது தருவது தானம்.
- ஒருவரின் பசியை அறிந்து, அவர் கேட்காமலேயே அந்தப் பசியைப் போக்குவது தர்மம்.
மகாபாரதம் என்று கூறினாலே, கண்ணபிரான் எப்படி நம் மனக்கண்ணில் வந்து நிற்பாரோ, அதே போல வந்து போகும் கதாபாத்திரங்களில் முக்கியமானது, கர்ணனின் கதாபாத்திரம். கர்ணன் இருந்தது தவறான இடமாக இருந்தாலும், அவன் அனுபவித்த வேதனைகள் அவனை சிறுசிறு தவறுகள் செய்ய வைத்திருந்தாலும், அவன் செய்த ஈகை குணத்தின் காரணமாக, வானளவு உயர்ந்து நின்றான் என்பதே உண்மை. அப்படிப்பட்ட கர்ணன், சூரியனின் பிள்ளையாக, குந்திதேவிக்கு பிறந்தவன்.
குருசேத்திரப் போரில் கர்ணன் இறந்த பிறகு, அவனது ஆன்மா தனது தந்தையான சூரியதேவனையும், சிவபெருமானையும் வணங்கி சொர்க்கலோகம் சென்றது. இந்த நேரத்தில் சூரியனுக்கு மிகப்பெரிய சந்தேகம் மனதில் உழன்று கொண்டிருந்தது. போர்க்களத்தில் அர்ச்சுனன் விட்ட அம்புகள் மார்பில் பாய்ந்த போதும், மரணிக்காமல் இருந்தான், கர்ணன். அப்போது அவனது உயிரை, அவன் செய்த புண்ணியங்கள் காத்து நிற்பதாக கண்ணபிரான் கூறுவார். அந்த புண்ணியங்களை எல்லாம் வயதான அந்தணரின் உருவில் வந்து கண்ணன் பெற்ற பிறகு, அர்ச்சுனன் விடும் அம்புக்கு கர்ணன் உயிர் துறப்பான்.
புண்ணியங்களின் பலனாக கர்ணனின் உயிர் பிரியவில்லை என்பதால் அந்த புண்ணியங்களை யாசகமாக பெற்றார் கண்ணன். இதன் மூலம் கர்ணனுக்கு மேலும் புண்ணியம் சேர்ந்து, மரணமே நிகழ்ந்திருக்கக்கூடாது அல்லவா?- இதுதான் சூரியனின் மனக் குழப்பத்திற்கு காரணம். அந்த மனக்குழப்பத்தாலும், கோபத்தாலும் அவரது உடல் வெப்பம் அதிகரித் தது. இதை உணர்ந்த ஈசன், சூரியனின் முன்பாகத் தோன்றி, “சூரியனே.. உன் மனதில் என்ன தடுமாற்றம்?” என்று கேட்டார்.
சிவபெருமானை வணங்கிய சூரியன், “ஐயனே.. பலவிதமான தான தருமங்களைச் செய்து புண்ணியங்களைச் சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை, போரில் கொன்றது விதி என்று ஏற்றுக்கொண்டேன். ஆனால் எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாக அளித்ததால், அவன் இன்னும் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே.. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது? இது எனக்கு அநீதியாகத் தெரிகிறது இறைவா” என்றார்.
முகத்தில் புன்னகையை படரவிட்ட ஈசன், “பொதுவாக மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே, உன்னை இந்தக் கேள்வி எழுப்ப வைத்துள்ளது. உன் மூலம் அவர்களுக்கும் பதில் கிடைக்கும். பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அல்லது பிறர்மூலம் அறிந்தோ தருவது, ‘தானம்’ எனப்படும். இது புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில் இல்லாதவரும், இயலாதவரும் கேட்டபின் கொடையளிப்பது என்பது ஒரு மன்னனின் கடமை. ஆனால் எவரும் கேட்காமல், நாமாக ஒருவரின் நிலையறிந்து கொடுப்பது ‘தர்மம்’. இதுதான் புண்ணியம் தரும். இன்னும் எளிமையாகச் சொல்வதென்றால், பசித்திருக்கும் ஒருவர் கேட்ட பின் ஏதாவது தருவது தானம். ஒருவரின் பசியை அறிந்து, அவர் கேட்காமலேயே அந்தப் பசியைப் போக்குவது தர்மம்.
கர்ணன் பல தர்மங்களைச் செய்து புண்ணியம் ஈட்டியவன்தான். ஆனால் மொத்த புண்ணியத்தையும், கிருஷ்ணர் தானமாகக் கேட்டு வாங்கினாரே தவிர, தர்மமாகப் பெறவில்லை. அனைத்து புண்ணியங்களையும் தானமாக தாரை வார்த்துக் கொடுத்தபின், கர்ணனும் ஒரு சாதாரண மனிதன்தான். அதனால்தான் மரணம் அவனை எளிதாக பற்றிக்கொண்டது” என்று கூறிய சிவபெருமானை வணங்கி நின்றார், சூரியன். அவரது மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கியிருந்தது.