மதுபோதையில் கொழும்பு பம்பலப்பிட்டியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்குள் சென்று, அங்கும் மது அருந்தி விட்டு, பொலிஸ் பலத்தை காட்ட முயற்சித்த கொழும்பு குற்றப் பிரிவின் 8 அதிகாரிகள், களியாட்ட விடுதியின் பாதுகாவலர்களின் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகிய சம்பவம் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.
விருந்தில் மது அருந்தி விட்டு களியாட்ட விடுதிக்கு சென்ற பொலிஸார்
இடமாற்றம் பெற்று செல்லும் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு ஒருவருக்காக அண்மையில் கொழும்பு கெம்பனித்தெருவில் மதுவுடன் கூடிய விருந்து நடத்தப்பட்டுள்ளது.
அங்கு மது அருந்திய இந்த பொலிஸ் அதிகாரிகள் பம்பலப்பிட்டியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்குசென்றுள்ளனர். பொலிஸ் பரிசோதகர்கள், உப பொலிஸ் பரிசோதகர்களுடன் கூடிய கொழும்பு குற்றப்பிரிவின் இந்த அதிகாரிகள் குழு, களியாட்ட விடுதிக்குள் மோதலை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்தே அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ள பொலிஸ் அதிகாரிகளில் இருவர் களனி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து நடந்ததாக கூறி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பிான பிரச்சினை சமாதானமாக தீர்க்க முயற்சிக்கும் தரப்பு
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக பம்பலப்பிட்டியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியின் நிர்வாகம், பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸ் திணைக்களத்திற்கும் அவமதிப்பை ஏற்படுத்தும் இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான புலனாய்வு அறிக்கை ஏற்கனவே பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான பிரச்சினையை சமாதானமாக முடித்துக்கொள்ள ஒரு தரப்பு முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.