அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி புதிய முதல்-அமைச்சராக நேற்று பதவி ஏற்றார். அவர் நாளை சட்டசபையில் பெரும் பான்மை பலத்தை நிரூபிப்பதாக அறிவித்துள்ளார்.
இதற்காக காலை 11 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்குகிறது. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மேற் கொண்டுள்ளது.
இதற்கிடையில் அந்த அணியை வீழ்த்துவதற்கான முயற்சிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் தொடர்ந்து கூவத்தூர் விடுதியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
நாளை நடைபெறும் வாக்கெடுப்பில் கலந்து கொள்வது, அதிகப்படியான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை தங்கள் பக்கம் திருப்புவது, ஆகியவை பற்றி விவாதிப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் இன்று அவரது ஆதரவாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டத்துக்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். அவரை ஆதரிக்கும் 10 எம்.எல்.ஏக்கள், 12 எம்.பி.க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளான பொன்னையன், பி.எச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும், அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருவரது வீடும் அருகருகே உள்ளது. இருவரது வீட்டு வாசலும் நேருக்குநேர் சந்திக்கின்றன.
எனவே மீண்டும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக தடுப்பு வேலிகள் அமைத்து ஓ.பன்னீர் செல்வம் வீட்டுக்கு செல்பவர்களை தனி வழியாகவும், சி.வி.சண்முகம் வீட்டுக்கு செல்பவர்களை தனிவழியாகவும் போலீசார் அனுப்பினர். வாசல் முன்பு கூட்டம் கூடுவதை போலீசார் அனுமதிக்கவில்லை.