சொந்த காணிகளை மீட்டெடுப்பதற்காக கேப்பாப்புலவு மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் பதினெட்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
காணிகள் விடுவிப்பது தொடர்பில் அரசாங்க அதிபரினால் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதும் அவற்றில் உண்மை உறுதியற்று காணப்பட்டதினால் அவர்கள் அந்த வாக்குறுதியை நிராகரித்துள்ளனர்.
பின்னர் பிரதமரை சந்தித்து காணிகள் விடுவிப்பது தொடர்பாக பேசுவதற்கு மக்கள் பிரதிநிதி ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரதமரை சந்தித்தாலும் அங்கும் உறுதியற்ற வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதால் பிரதமரை சந்திப்பதையும் தவிர்த்துள்ளார்கள்.
பின்னர் மீள்குடியேற்ற அமைச்சரின் வாக்குறுதி அரசாங்க அதிபர் ஊடாக வழங்கப்பட்ட போதும் அவற்றையும் நிராகரித்து வாக்குறுதியை எழுத்து வடிவில் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்கள்.
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு காணிகள் விடுவிப்பது தொடர்பான முடிவுகள் ஓரளவு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் காணிகள் விடுவிப்பது தொடர்பாக அவருக்கு கிடைக்கப்பெற்ற வாக்குறுதிகள் உறுதியற்று காணப்படுவதினால் கேப்பாப்புலவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் காணிகள் விடுவிக்கப்படும் என்று வாக்குறுதிகள் வழங்க தாமதிக்கின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.