பிரபல தொலைக்காட்சி நடிகையான துனிஷா சர்மா, கடந்த 24-ந்தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நடிகை துனிஷாவின் இறுதி சடங்கு தொடங்கிய சில நிமிடங்களில் அவரது தாயார் துக்கத்தில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையான துனிஷா சர்மா, கடந்த 24-ந்தேதி அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்டபோது, திடீரென தூக்கு போட்டு உயிரிழந்த நிலையில், போலீசார் அவரது உடலை கண்டெடுத்தனர். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என பரபரப்பாக பேசப்படுகிறது. நடிகை துனிஷாவை தற்கொலைக்கு தூண்டினார் என்று அவரது தாயார் அளித்த புகாரின் பேரில், சக நடிகரான ஷீஜன் கான் என்பவரை வாலிவ் நகர போலீசார் கைது செய்து, கொலை மற்றும் தற்கொலை என்ற கோணங்களில் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
துனிஷா மரணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துள்ளனர். இதனை தொடர்ந்து, 15 நாட்கள் பிரிவுக்கு பின்னர் துனிஷாவை மரணத்திக்கு தூண்டிய விசயம் என்ன?, இருவருக்கும் இடையே நடந்தது என்ன? என்பது பற்றி அறிவதற்காக இருவரின் மொபைல் போன்கள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை வழக்குடன் தொடர்புடைய 17 பேரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு உள்ளன. படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், நடிகை துனிஷாவின் இறுதி சடங்கு மீரா சாலையில் உள்ள தகன மேடையில் நடைபெற்றது. இதற்காக அவரது உடல் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. நடிகை துனிஷாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவரது நண்பர்கள் மற்றும் திரை துறையினர் வந்தனர். நடிகை துனிஷா இறுதி சடங்கில் ஷீஜன் கானின் சகோதரிகளான சபாக் நாஜ், பலாக் நாஜ் மற்றும் தாயார் கலந்து கொண்டனர். அப்போது, கானின் சகோதரி பலாக் நாஜ் கதறி அழுதுள்ளார். ஷீஜன் கானின் தாயாரும் கண் கலங்கியபடி காணப்பட்டார்.