- 386 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை விளையாடியது.
- தென் ஆப்பிரிக்க 68.5 ஓவரில் 204 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 189 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டேவிட் வார்னர் இரட்டை சதமும் (200 ரன்), அலெக்ஸ் கேரி சதமும் (111 ரன்) அடித்தனர்.
ஸ்டீவன் சுமித் 85 ரன்னும், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன் தலா 51 ரன்னும் எடுத்தனர். 386 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை விளையாடியது. கேப்டன் டீன் எல்கர் டக்-அவுட் ஆனார்.
நேற்றைய 3-வது நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கெட்டுக்கு 15 ரன் எடுத்திருந்தது. டிபுருன் 6 ரன்னுடனும், சாரல் எர்வீ 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது.
தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி சிறிது நேரம் மட்டுமே தாக்கு பிடித்தது. எர்வீ 21 ரன்னிலும், டிபுருன் 28 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
அடுத்து களம் வந்த கயா சோன்டோ ஒரு ரன்னில் ரன் அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா அணி 65 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது.
அதன்பின் பவுமா-வெர்ரின்னே ஜோடி நிதானமாக விளையாடியது. இந்த ஜோடி மதிய உணவு இடைவேளை வரை தாக்கு பிடித்தது. இடைவேளைக்கு பிறகு வெர்ரின்னே (33 ரன்) ஆட்டமிழந்தார்.
பொறுமையாக விளையாடிய பவுமா அரை சதம் அடித்தார். அடுத்து களம் இறங்கிய மார்கோ ஜேன்சன் 5 ரன்னிலும், கேசவ் மகராஜ் 13 ரன்னிலும் அவுட் ஆனார். பவுமா 65 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்க 68.5 ஓவரில் 204 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 182 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 3 விக்கெட்டும், ஸ்காட் போலண்ட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த வெற்றி மூலம் 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று கைப்பற்றி உள்ளது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இரு அணிகளும் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.