ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கார்க்குண்டு வெடிப்பில் 51 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 55 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு மற்றும் மருத்துவத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
ஆபத்தான நிலையில் பலரும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாதுகாப்பு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாக்தாத் நகரின் தென்மேற்கு பகுதியில் ஷியா முஸ்லிம்கள் செறிந்துவாழும் Hayy al-Shurta பகுதியில் இந்த கார்க் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன திருத்துமிடங்கள் மற்றும் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட கார் விற்பனை நிலையங்கள் என்பன அமைந்துள்ள சனநெரிசல் மிகுந்த பகுதியில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வெடிக்கச் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்ற தாக்குதல் சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் புதன்கிழமை பாக்தாத்தின் கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.