கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இதன்படி தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில், சுமார் 100 இற்கும் மேற்பட்ட வாக்கு மூலங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன.
2000 கோடி ரூபா முதலீடு
தினேஷ் ஷாப்டர் சுமார் 2000 கோடி ரூபாவை தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்து திவாலாகியமையினால் அவரே தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக உண்மைக்கு புறம்பான பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இருப்பினும், குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் ஊடகங்களில் போலி தகவல்கள் பரவி வருவதாகவும் தீவிர விசாரணையின் பின்னர் உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தினேஷ் ஷாப்டரின் கணக்கியல் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா? இவ்வளவு பணம் வைத்திருந்தால், அந்த பணத்திற்கு வருமான வரி செலுத்தியுள்ளாரா போன்ற தகவல்கள் குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
மேலும், கொழும்பில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் எழுதியதாக கூறப்படும் கடிதம் வழக்கினை திசை திருப்பும் நோக்கில் பரவி வரும் போலி தகவல் என்றும் கூறப்படுகின்றது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, தினேஷ் ஷாப்டரின் கழுத்தை நெரிக்க பயன்படுத்தப்பட்ட வயர் மற்றும் தினேஷ் ஷாப்டரின் கைகளைக் கட்டிய சில கேபிள் வயர்கள் போன்ற மாதிரியும் அவரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்றும் கூறப்படுகின்றது.