- ரிஷப் பண்டின் உடல் நிலையில் கணிசமான முன்னேற்றம் உள்ளது.
- லண்டனில் இருந்த ரிஷப் பண்டின் தாய் சரோஜ், சகோதரி சாஷி ஆகியோர் நேற்று காலை இந்தியா வந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்தது. இதில் ரிஷப் பண்ட் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் அடைந்து அவர் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நெற்றி காயத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. ரிஷப் பண்டின் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ரிஷப் பண்ட் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று உறவினர்கள், குடும்ப நண்பர்கள் தெரிவித்தனர்.
ரிஷப் பண்டின் உடல் நிலையில் கணிசமான முன்னேற்றம் உள்ளது. அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டுமா என்பதை மருத்துவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.
லண்டனில் இருந்த ரிஷப் பண்டின் தாய் சரோஜ், சகோதரி சாஷி ஆகியோர் நேற்று காலை இந்தியா வந்தனர். அவர்கள் ரிஷப் பண்டுடன் இருந்து அவரை கவனித்து வருகிறார்கள் என்றனர்.
ரிஷப் பண்ட்டை டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க இயக்குனர் ஷியாம் சர்மா சந்தித்தார். பின்னர் அவர் கூறும் போது, “ரிஷப் பண்ட் இங்குள்ள மருத்துவர்களால் நன்கு கவனிக்கப்பட்டு வருகிறார். அவர்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியமும் தொடர்பில் உள்ளது. தற்போது ரிஷப் பண்ட் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் மட்டுமே வைக்கப்படுவார்.
ரிஷப் பண்ட் காரில் சென்றபோது சாலையில் ஒரு பள்ளத்தை தவிர்க்க முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிதார்” என்றார்.