வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னின் சகோதரர் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வியட்நாம் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒரு வெளிநாட்டு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்துக்குள்ளாகி வரும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் அவ்வப்போது தொடர்ந்து பரிசோதித்து வருகிறார்.
இந்நிலையில், கிம் ஜாங் உன்-னின் ஒன்றுவிட்ட சகோதரரான (தந்தையின் சகோதரர் மகன்) கிம் ஜாங் நாம் மலேசியாவில் 6-2-2017 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மலேசிய போலீசார் வியட்நாம் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒரு வெளிநாட்டு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளதாகவும், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.
இந்த கொலையில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருவதாகவும், வெளிநாட்டை சேர்ந்த ஒரு கும்பலின் சதி திட்டப்படி, இரண்டு பெண்கள் கிம் ஜாங் நாம்-ஐ கொன்றதாக சந்தேகிக்கப்படுவதாகவும் மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், கிம் ஜாங் நாம்-ன் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு மலேசிய அரசுக்கு வடகொரியா அரசு தகவல் அனுப்பி இருந்தது. இதுதொடர்பாக, மலேசிய போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிம் ஜாங் நாம்-ன் உடலை அடையாளம் காட்டவோ, இறந்தது அவர்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தெரிவிக்கவோ அவரது உறவினர்களில் யாரும் இன்னும் முன்வரவில்லை.
கிம் ஜாங் நாம்-ன் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு முன்னதாக அவரது உறவினர்களை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. அந்த பரிசோதனைக்கு பிறகுதான் உடலை வடகொரியாவிடம் ஒப்படைக்க முடியும் என மலேசியாவின் செலாங்கோர் மாவட்ட போலீஸ் உயரதிகாரி அப்துல் சமா மட் தெரிவித்துள்ளார்.