- ராஜாதி ராஜா என்று அழைப்பதற்கு ஒரு வரலாறு உண்டு.
- அந்த வரலாறு என்ன என்று இங்கு பார்க்கலாம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பள்ளி கொண்டுள்ள ரெங்கநாதர் இந்த உலகிற்கெல்லாம் ராஜா. ராஜாதி ராஜா என்று அழைக்கப்படுகிறார். இதற்கு ஒரு வரலாறு உண்டு. ஆம் அந்த வரலாறு என்ன என்று இங்கு பார்க்கலாம்.
மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்க மன்னர் ஒருமுறை ரெங்கநாதரை தரிசிப்பதற்காக ஸ்ரீரங்கம் வந்தார். அவர் வந்த நேரத்தில் ரெங்கநாதர் நகர்வலம் கிளம்பிவிட்டார். மன்னர் வந்ததோ சற்று தாமதமாக. அதனால் மன்னரின் கோபத்திற்கு ஆளாகி விடுவோமோ என்று பயந்த கோவில் நிர்வாகிகள், விழாவை மீண்டும் ஒருமுறை நடத்தி ரெங்கநாதரை எழுந்தருள செய்வதற்கு ஏற்பாடுகளை செய்தனர்.
அதனை கண்டு கோபமுற்ற மன்னர், அது கூடாது. நான் இந்த நாட்டுக்கு தான் ராஜா. ஆனால் ரெங்கநாதர் இந்த உலகையே ஆளும் ராஜாதி ராஜா. அரசருக்கு எல்லாம் அரசர். அதனால் அவரை தடுத்து நிறுத்தக்கூடாது. அடுத்த ஆண்டு இதே எழுந்தருளல் நிகழ்ச்சி வரும் வரை நான் எனது நாட்டுக்கு செல்லப்போவதில்லை. இங்கேயே காத்திருந்து அடுத்தாண்டு தரிசித்துவிட்டு தான் செல்வேன்’ என்று அங்கேயே தங்கினார்.
அதை நினைவுகூறும் வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மகேந்திரன் சுற்று பகுதியில் மன்னர் தனது பட்டத்து ராணி உடன் இருக்கும் சிலை ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. உலகை ஆளும் ராஜா, ராஜாதிராஜா என்பதால்தான் கோவில் உற்சவங்களில் குறிப்பாக சொர்க்கவாசல் திறப்பின்போது நம்பெருமாளுக்கு முன்னால் செங்கோல் ஏந்தி ஒரு சேவகர் செல்வதை இப்போதும் காணலாம். செங்கோல் மன்னர்களுக்கு மட்டுமே உரியது. ஆம் மன்னர்களுக்கு எல்லாம் மன்னர் என்பதால் நமது நம்பெருமாள் செங்கோலுடனே பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.