பிரபல பாதாள உலக செயற்பாட்டாளராக கருதப்படும் ‘கஞ்சிபானி’ இம்ரான் என்கிற முகமது நஜீம் முகமது இம்ரான் பாகிஸ்தானுக்கு செல்லும் நோக்கிலேயே இந்தியாவிற்குள் பிரவேசித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கஞ்சிப்பானி இம்ரான் தமிழகத்தின் இராமேஷ்வரத்திற்குள் நுழைந்துள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவு அண்மையில் அறிவித்திருந்தது.
போதைப்பொருள்
கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மன்னாரில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிலுள்ள ராமேஸ்வரனுக்குச் சென்ற கஞ்சிபானி இம்ரானுக்கு பாகிஸ்தானில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றும் புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன.
இந்நிலையில், கஞ்சிப்பானி இம்ரான் தனது நண்பர்களுடன் இலங்கையில் இருந்து தமிழ் நாட்டிற்கு ஊடுருவியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கடலோர பகுதியில் இருவரையும் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரம்
கடலோர காவற்படையினர், தமிழக காவல்துறையின் பாதுகாப்பினை மீறி தமிழகத்தில் நுழைந்தமை எல்லையோர பாதுகாப்புக் குறைபாடுகளை எடுத்துக்காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயற்பட்டு வரும் ஹெரோயின், கொக்கெய்ன் கடத்தல் கும்பல்களுடன் முஹம்மது இம்ரானுக்கு பிணைப்பு உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், இம்ரானின் ஊடுருவல் நிலைமையை மோசமாக்கக்கூடும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார்.