- 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது.
- எங்களது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி பட்டியலையும் வழங்கி இருக்கலாம்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷா, இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் போட்டி பட்டியலை வெளியிட்டார்.
இதில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் போட்டி நடைபெறும் இடம் குறித்தோ, போட்டி அட்டவணை பற்றியோ தெரிவிக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே பெற்றுள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப முடியாது என்று கூறிய ஜெய்ஷா போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ஜெய்ஷாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி டுவிட்டரில் கூறியதாவது:-
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் 2023-24-ம் ஆண்டுக்கான கட்டமைப்பு மற்றும் போட்டி பட்டியலை ஒரு தலைபட்சமாக வழங்கிய ஜெய்ஷாவுக்கு நன்றி. 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது.
அதில் நீங்கள் இருக்கின்ற வேளையில் எங்களது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி பட்டியலையும் வழங்கி இருக்கலாம். விரைவான பதில் பாராட்டப்படும் என்று கிண்டல் அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ரமீஸ் ராஜா கூறும் போது, ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வர மறுத்தால் இந்தியாவில் நடத்தும் 50 ஓவர் உலக கோப்பையை புறக்கணிப்போம் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.