- சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்றுகள் எட்டிப்பார்க்கும்.
- குளிர்காலத்தில் உட்கொள்ளும் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
குளிர்காலம் தொடங்கிவிட்டாலே நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிப்புக்குள்ளாகிவிடும். சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்றுகள் எட்டிப்பார்க்கும். குளிர்காலத்தில் உடல் சமநிலையை பேணுவதற்கு உட்கொள்ளும் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் எந்தவித நோய்களையும் தடுக்கும் அளவுக்கு வலுவாக இருப்பதை உறுதி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். அத்தகைய சூப்பர் உணவுகள் இவை…
இஞ்சி : இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இதனால் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எளிதாக விரட்டலாம். குளிர்ந்த மாதங்களில் எத்தகைய நோயையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் இஞ்சியை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இஞ்சி டீயும் பருகி வரலாம்.
பாதாம் : பாதாமில் மெக்னீசியம், புரதம், ரிபோப்ளேவின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஈ சத்தும் ஏராளமாக இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தும். வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். பாதாமை அப்படியே சாப்பிடலாம். தண்ணீரில் ஊற வைத்தும் சுவைக்கலாம். பாதாம் பாலும் பருகி வரலாம்.
மஞ்சள் :மஞ்சள் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பப்பெற்றது. அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டது. குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினசரி உணவில் மஞ்சள் இடம் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன், தொண்டைப்புண் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.
துளசி : நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் துளசி இலையில் உள்ளன. சுவாச மண்டலத் துக்கு புத்துயிர் அளிக்கக்கூடியது. நுரையீரலையும் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் தினமும் தவறாமல் துளசி இலைகள் சிறிதளவு உட்கொள்வது நல்லது.
பூண்டு :இது வைட்டமின் சி, பி, துத்தநாகம் மற்றும் போலேட் போன்ற சத்துக்களின் கலவையாக விளங்குகிறது. மேலும் பூண்டில் ஆன்டிவைரல், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் குளிர்கால நோய் பாதிப்புகளான சளி மற்றும் இருமல் ஆகியவற்றில் இருந்தும் பாதுகாக்கிறது.