- இந்திய வீரர்களை தேர்வு செய்யும் புதிய தேர்வு குழு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
- ரோகித் சர்மா, வீராட் கோலி ஆகிய இருவருமே 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ளனர்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 8 போட்டிகள் நடந்துள்ளன.
இந்திய அணி ஒரே ஒரு முறை மட்டுமே 20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. அறிமுக போட்டியான 2007ல் டோனி தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
அதன் பிறகு 2014 போட்டிக்கான 20 ஓவர் உலக கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இலங்கையிடம் தோற்றது. இதுவரை 2 முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது. ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரை இறுதியில் இங்கிலாந்திடம் மோசமாக தோற்றது.
2024-ம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இந்த உலக கோப்பை போட்டியிலாவது சாம்பியன் பட்டம் பெற்று விட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.பி.சி.ஐ.) தீவிரமாக உள்ளது. இதனால் இப்போதே இளம் வீரர்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
உலக கோப்பையை கருத்தில் கொண்டு சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, வீராட்கோலி ஆகியோர் இனி வரும் 20 ஓவர் போட்டியில் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று தெரிகிறது.
ஹர்திக் பாண்ட்யா அணிக்கு கேப்டனாக செயல்படுவார். அவர் ஏற்கனவே பல தொடர்களில் கேப்டனாக இருந்து 20 ஓவர் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அவர் நீண்ட காலத்துக்கு 20 ஓவர் அணியின் கேப்டனாக செயல்பட கிரிக்கெட் வாரியம் கருதுகிறது.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட 20 ஓவர் அணியை தான் கிரிக்கெட் வாரியம் விரும்புவதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய வீரர்களை தேர்வு செய்யும் புதிய தேர்வு குழு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சேட்டன் சர்மா தொடர்ந்து தேர்வு குழு தலைவராக நீடிக்கப்பட்டு உள்ளார்.
20 ஓவர் போட்டியின் எதிர்காலம் தொடர்பாக அவர் ரோகித்சர்மா, வீராட்கோலி ஆகியோருடன் பேசுவார் என்று தெரிகிறது. அப்போது கிரிக்கெட் வாரியத்தின் திட்டத்தை எடுத்துரைப்பார். அவர்களாகவே 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்பேத கிரிக்கெட் வாரியத்தின் விருப்பமாக உள்ளது.
ரோகித் சர்மா 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 20 ஓவர் போட்டியில் ஆடினார். வீராட் கோலி 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிராக அறிமுகம் ஆனார். 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 20 ஓவரில் ஆடினார்.
இருவரும் 20 ஓவர் உலக கோப்பைக்கு கேப்டனாக இருந்துள்ளனர். ஆனால் கோப்பையை வென்றது இல்லை. இதனால் தான் தற்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ரோகித் சர்மா, வீராட் கோலி ஆகிய இருவருமே 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ளனர். 34 வயதான வீராட் கோலி 115 போட்டியில் 107 இன்னிங்சில் 4008 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதில் ஒரு சதமும், 37 அரை சதமும் அடங்கும். 35 வயதான ரோகித் சர்மா 140 ஆட்டத்தில் 3853 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். 4 சதமும், 29 அரை சதமும் அடித்துள்ளார்.