- ஏழில் அமர்ந்த கிரகமே வாழ்க்கை துணை அமைவதை தடை செய்கிறது.
- திருமணம் கால தாமதமாகவே நடக்கும்.
ஒருவரின் வாழ்க்கை தரம் வேகமாக உயர்வதற்கும், தாழ்வதற்கும் சனி மிக முக்கிய காரணமாகும். சனி என்றால் கர்ம பந்தம் . கர்ம பந்தம் இல்லாத ஒருவருடன் சம்பந்தம் ஏற்படாது. அந்த வகையில் ஏழில் சனி முழுமையான கர்மபந்தம். பூர்வ ஜென்ம விட்ட குறையின் தொடர்ச்சி. சென்ற பிறவியில் தம்பதிகளாக வாழ்ந்தவர்களே இந்த பிறவியிலும் தம்பதிகளாக வாழ்வார்கள். குறைந்தது 27 வயதிற்குப் பிறகே திருமணம் நடக்கிறது.
சனி நின்ற நட்சத்திர சார அடிப்படையில் திருமணம் நடக்காத நிலையும் உண்டு. ஒருவர் மற்றவருக்கு செய்த நல்ல, தீய செயல்களின் பதிவுகள்படி வாழ்க்கை இருக்கும். சனி தாமதத்தை குறிக்கும் கிரகம். சனி தான் நின்ற பாவகத்தின் மூலம் ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய பலனை தாமதப்படுத்துவார். திருமணம் கால தாமதமாகவே நடக்கும். ஜாதகரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் தன்மை குறைந்த களத்திரமே கிடைக்கும்.
சனி நீசம், அஸ்தமனம், வக்ரம் பெற்றவர்கள் மற்றும் செவ்வாய், ராகு, கேதுக்களுடன் சம்பந்தம் இருப்பவர்களும் தொழில் நிமித்தம் அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். சனி மந்ததன்மை மற்றும் பொய் பேசுவதற்கு காரணமாக இருப்பதால் வெறுப்பால் பிரிவு ஏற்படுகிறது. கடக, சிம்ம லக்னத்திற்கு சனி மன நிறைவான மண வாழ்க்கையை தருவதில்லை.ஏழாம் இடத்தோடு சனி சம்மந்தம் இருந்தால் எளிதில் விவாகரத்தும் கிடைக்காது. வயதான பிறகே புரிதல் ஏற்பட்டு அன்னியோன்ய தம்பதிகளாக வாழ்வார்கள்.
பரிகாரம்
திருமணம் முடியும் வரை சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு பால் அபிசேகம் செய்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். பித்ருக்கள் வழிபாடு மிக அவசியம்.
சனிக்கிழமை திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று வர வேண்டும்.
பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள்,தொழிலாளிகள், துப்புரவுதொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவி நல்ல பலனை தரும்.
சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம், நல்லெண்ணெய் தானம், இரும்புச் சட்டி தானம் செய்வது சிறப்பு.