“பிரச்சினைகள் எல்லோருக்கும் வரும். அதுபோல்தான் சந்தோஷமும். சிலர் கஷ்டத்தில் தடுமாறிப்போவார்கள். இன்னும் சிலரோ அதை படிக்கல்லாக்கி வாழ்க்கையில் மேலும் உயர்வார்கள். நான் இதில் இரண்டாவது ரகம். சந்தோஷத்தையும், கஷ்டத்தையும் சமமாக எடுத்துக்கொள்வதில்தான் நிஜமான மகிழ்ச்சியே இருக்கிறது. நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகி விட்டது. இப்போது முன்னணி கதாநாயகியாக இருக்கிறேன்.
இந்த உயரத்துக்கு எளிதாக வந்து விடவில்லை. நிறைய பிரச்சினைகளையும், போராட்டங்களையும் சந்தித்துத்தான் வளர்ந்து இருக்கிறேன். பிரச்சினைகள் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். அது முதிர்ச்சியை கொடுக்கும். சவால்களை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் கொடுக்கும். நான் வலிமையான தைரியமான பெண்ணாக இருக்கிறேன். அப்படி என்னை மாற்றியதற்கு நான் எதிர்கொண்ட பிரச்சினைகள்தான் காரணம். அதுதான் சினிமாவில் என்னை வலுவாக காலூன்றவும் வைத்து இருக்கிறது.
சில நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். சில நேரம் சோர்வு மனநிலையில் இருக்கிறோம். சோர்வு மனநிலை நமக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தருகிறது. எந்த துறையாக இருந்தாலும் பிரச்சினைகள் வரும்போது அவற்றை சமாளிக்க தைரியம் வேண்டும். அப்படிபட்டவர்கள்தான் வாழ்க்கையில் பாடங்களை கற்றுக்கொள்கிறார்கள். அதனால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கும், போராட்டங்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்க்கையை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவு எனக்கு இருக்கிறது. எனக்கு என்ன வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறேன். அதனால் எனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிகிறது. என்னை மற்றவர்கள் அழகான புத்திசாலி என்று அழைக்கிறார்கள். குழப்பம் என்பது எனது வாழ்க்கை அகராதியிலேயே கிடையாது.
புத்திசாலித்தனமான முடிவுகளையே எடுக்கிறேன். பத்து வருடங்கள் தொடர்ந்து நடித்து விட்டேன். இனிமேல் நடிப்புக்கு சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பது விருப்பமாக இருக்கிறது. அதுபோன்ற கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறேன்.”
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.