ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவி ஏற்ற சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர் நடிகர் ஆனந்தராஜ் கட்சியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், அவர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கும் முன்பு முதலில் மனசாட்சியிடம் கருத்து கேட்க வேண்டும். அடுத்து உறவினர்களிடமும், பின்னர் தொகுதி மக்களிடமும் கருத்து கேட்க வேண்டும். ‘ஜெயலலிதா தான் வேட்பாளர் என்று கருதி ஓட்டு போடுங்கள்’ என நான் கூறினேன். நாளை (இன்று) நீங்கள் அளிக்கப்போகும் வாக்கும் மக்களின் நம்பிக்கை பெற்றதாக இருக்க வேண்டும். நாளைக்கு நீங்கள் ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற தொகுதிக்கு தான் செல்லப்போகிறீர்களே தவிர, கூவத்தூருக்கு அல்ல.
எனவே, சட்டசபையில் நடைபெறும் வாக்கெடுப்பில் எம்.எல்.ஏ.க்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். ஒரு சிலர் போடுகின்ற பிச்சைக்காக எம்.எல்.ஏ.க்கள் செயல்படக்கூடாது. நிரந்தர அரசியல்வாதியாக இருக்க வேண்டுமா? அல்லது இடைப்பட்ட காலத்தில் அரசியல்வாதியாக இருந்துவிட்டு போய்விட வேண்டுமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
“எங்களுக்கு பதவி கிடைத்தால், 2 நல்ல காரியத்தை செய்து விட்டு தப்பித்துவிடுவோம். மக்கள் மறந்துவிடுவார்கள்” என எம்.எல்.ஏ.க்கள் கருதுகிறார்கள். ஆனால் முன்புபோல் மக்கள் கிடையாது. இளைஞர்கள் வீறு கொண்டு நடக்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் அனைத்து செய்திகளும் பரவுகின்றன.
இன்று உள்ள கொதிப்பு அனைவருக்கும் தெரிகிறது. செய்யக்கூடாதவற்றை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் செய்கிறார்கள். உண்மையான அ.தி.மு.க. யார் என மக்கள் தான் கூற வேண்டும். அதிக பெண்களுக்கு ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்தார்.
ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.வான அமைச்சர் வளர்மதியை யாருக்கு தெரியும்?. அவர் மக்களுக்கு மதிப்பளிப்பாரா? என்று தெரியவில்லை. என்னோடு அவரை ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வரச் சொல்லுங்கள். அவர் தற்போது எடுத்திருக்கும் முடிவுக்கு 10 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்தால் நான் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன். 90 சதவீத மக்கள் அவர் எடுத்திருக்கும் முடிவுக்கு எதிராக இருக்கிறார்கள்.
வெளிப்படையாகவே சவால் விடுகிறேன். வளர்மதி அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர். நான் தனி மனிதன். அவர் ஒரு இடைத்தேர்தலை சந்திப்பாரா? என்று கேளுங்கள். தைரியம் இருந்தால் ராஜினாமா செய்துவிட்டு வரட்டும். அப்படி வரும் தேர்தலில் சுயேச்சையாக நானும் நிற்கிறேன். அவரும் நிற்கட்டும். அவர் வெற்றி பெற மாட்டார். ஏனென்றால், மக்களின் மனநிலை அப்படி இருக்கிறது.
தேர்தலில் நிற்க வேண்டும். பதவியை அனுபவித்துவிட வேண்டும் என்ற சிறு சந்தோஷத்திற்காக அரசியல் அல்ல. நான் வணங்கி கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்காக நானும் வாக்குகளை கேட்டிருக்கிறேன். நாளை (இன்று) ஒரு தினம், ஒரு நிமிடம் சிந்தித்து மனசாட்சிப்படி வாக்களியுங்கள். அதற்கு முன்பாக உங்களுக்கு வாக்களித்த பொதுமக்களிடம் ஒரு வார்த்தை கேளுங்கள். இது என் அன்பு வேண்டுகோள்.
இவ்வாறு நடிகர் ஆனந்தராஜ் கூறினார்.