அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் தமது கடமைகளை வெளிப்படையாக நிறைவேற்றுவார்களாயின் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த முன்மாதிரி மேலிருந்து கிடைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றி ஜனாதிபதி,
தனது சொத்துக்களை வெளியிடவேண்டும் என்ற ஒரு ஆனை இல்லாதபோதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதனை வெளியிட நடவடிக்கை எடுத்தேன்.
அன்று பொது அபேட்சகராக தேர்தல் ஆணையாளருக்கு சொத்து விபரங்களை வெளியிட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப அவர்களுக்கும் அதனை வழங்கியதை ஜனாதிபதி இங்கு நினைவுகூர்ந்தார்.
2015 ஜனவரி 08 ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்தது ஊழல் மோசடிகள் எல்லைமீறிச் சென்றிருந்த ஒரு அரசாங்கத்தை மாற்றுவதற்காகவேயாகும்.
நாட்டு மக்கள் புதிய அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவந்தது முன்பு இருந்த அரசாங்கத்தை போன்று செயற்படுவதற்கல்ல.
கடந்த அரசாங்கத்தின் மீது மக்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் புதிய அரசாங்கத்தின் மீது சுமத்தப்படக்கூடாது.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுக்கும் போது அரசியல்வாதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையே சுமுகமானநிலையும் உடன்பாடும் இடம்பெறுவது முக்கியமாகும்.
அது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பலமாக அமையும்.
அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் தாம் பழக்கப்பட்டுள்ள பிழையான கலாசாரத்திலிருந்து விடுபடுவதுடன், மிகவும் நேர்மையாக தமது கடமைகளை நாட்டுக்காக நிறைவேற்றவேண்டும்.
இன்று நாட்டிலுள்ள ஜனநாயக உரிமைகளை தவறாகப் பயன்படுத்தி கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் அதிகரித்துள்ளது.
இராணுவத்தினர் தொடர்பில் இதுவரை எந்த அரசாங்கமும் எடுக்காத தீர்மானத்தை மேற்கொண்டு அவர்களுக்கு வழங்கக்கூடிய உயர்ந்த கௌரவத்தை பெற்றுக்கொடுத்து 12 வருடங்களை விட குறைந்த சேவைக்காலத்தைக் கொண்டுள்ள இராணுவத்தினருக்கும் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்தது.
இதுவரை வழங்கப்படாத இந்த சலுகையை பெற்றுக்கொடுக்கும் போது மற்றுமொருசாரார் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு இலங்கை ஜனாதிபதியுடன் சொத்து விபரங்களை வெளியிடாத நிலையில் முதல் முறையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தனது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.