இலங்கையின் கடன் நெருக்கடி தொடர்பில் சீனாவின் எக்சிம் வங்கியும் இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
சீன ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் தலைவர் வூ ஃபுலின் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் தலைவர் வூ ஃபுலின், இலங்கையின் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று(12.01.2023) பயனுள்ள காணொளி மாநாடு ஒன்றை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு ஒத்துழைப்பு
இதன்போது இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இலங்கையின் தற்போதைய கடன் பிரச்சினைகள் குறித்து இரண்டு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு உதவவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது.