- ஆத்மார்த்த பிரார்த்தனைக்கு வினையின் வேகத்தை கட்டுப்படுத்தும் வலிமை உண்டு.
- இன்று மாலை மாலை 6.04 மணிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார்.
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச் சகம் வாழ இன்னருள் தா தா
நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 3-ம் நாள் 17.1.2023 செவ்வாய் கிழமை இன்று மாலை 6.04 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி நவகிரகங்களில் நீதிமானாக போற்றப்படும் சனி பகவான் தனது சொந்த வீடான மகர ராசியில்(காலபுருஷ10ம் ராசி) அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து மற்றொரு சொந்த வீடான கும்ப ராசி (காலபுருஷ11ம் ராசி) அவிட்டம் 3ம் பாதம் சென்று ஆட்சி பலம் பெறப்போகிறார்.
சனி பகவான் தனது 3ம் பார்வையால் காலபுருஷ முதல் ராசியான மேஷத்தில் உள்ள ராகுவையும் ஏழாம் பார்வையால் காலபுருஷ ஐந்தாம் ராசியான சிம்மத்தையும் பத்தாம் பார்வையால் காலபுருஷ அஷ்டம ஸ்தானமான விருச்சிகத்தையும் பார்வையிடு கிறார்.
சனிப் பெயர்ச்சி அனைவருக்கும் கெடுபலன் தராது. அவரவரின் சுய ஜாதகத்தில் நடப்பில் உள்ள தசை புத்திக்கு ஏற்ற சுப, அசுப விளைவுகளே நடக்கும். எனவே பரிகார ராசியினர் சுய ஜாதகரீதியான நடப்பு திசை மற்றும் புத்தி அறிந்து அதற்கேற்ப பரிகாரங்கள் மற்றும் இறைவழிபாடுகளை கடைபிடிக்க நல்ல விதமான முன்னேற்றங்கள் உண்டாகும்.
பரிகார ராசிகள்:
கடகம் – அஷ்டமச் சனி
சிம்மம் – கண்டகச் சனி
விருச்சிகம் – அர்தாஷ்டமச் சனி
மகரம் – பாதச் சனி
கும்பம் – ஜென்மச் சனி
மீனம் – ஏழரைச் சனி ஆரம்பம்
கடக ராசியினர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் சென்று வழிபடவும்.பிற 5 பாரிகார ராசியினர் குச்சனூர் அல்லது திருநள்ளாறு சென்று சனீஸ்வரரை வழிபட வேண்டும்.
மேஷம் – லாபச் சனி
ரிஷபம் – தொழில் சனி
மிதுனம் – பாக்கியச் சனி
கன்னி – ரோக ஸ்தான சனி
துலாம் – பஞ்சம சனி
தனுசு – சகாய ஸ்தான சனி
இந்த ராசியினர் சனிக்கிழமை சிவன் கோவிவில் உள்ள கால பைரவரை வழிபட நன்மைகள் இரட்டிப்பாகும்.
அதே போல் சனிப் பெயர்ச்சி என்றவுடன் யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.ஏப்ரல் 22, 2023ல் ஏற்படப் போகும் குருப்பெயர்ச்சியால் உலகிற்கு பல்வேறு சுப பலன்களும் உண்டாகும். சில மாதங்கள் ராகு குருவை கிரகணப் படுத்தினாலும் மீதமுள்ள மாதங்களில் நல்ல மாற்றங்கள் நிச்சயம் உண்டு.
மகர ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கும் இந்த இரண்டேகால் வருடத்தில் சுமார் ஒன்பது மாத காலம் சனி பகவான் வக்ர கதியில் இருப்பதால் குருவின் உதவியுடன் எளிமையாக சனி பகவானின் பிடியில் இருந்து விடுபடலாம் என்பது ஆறுதலான விசயம்.
அனைவரும் தமது கடமையையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் வரை நமது செயல்பாடுகளால் பிறரை காயப்படுத்தாமல் வாழும் வரை துன்பம் யாரையும் நெருங்காது. அத்துடன் வாக்கிய பஞ்சாங்கம் சரியா? திருக்கணித பஞ்சாங்கம் சரியா? என்ற விவாதமும் அவசியமற்றது. அவரவரின் சுய அனுபவத்தில் எந்த பஞ்சாங்க முறை ஒத்து வருகிறதோ அதை பயன்படுத்தும் உரிமை அனைவருக்கும் உள்ளது.
நடப்பது கலியுகம். ஆக்கமும் அழிவும் தருவது இயற்கை. கிரகங்கள் தன் கடமையை செய்யும் போது நமக்குள் இருக்கும் உயிரே இறைவன் என்பதை உறுதியாக உணரும் போது, ஆத்மா புனிதமடையும்.
ஆத்மார்த்த பிரார்த்தனைக்கு வினையின் வேகத்தை கட்டுப்படுத்தும் வலிமை உண்டு. சனி பகவான் காற்று ராசியான கும்பத்தில் சஞ்சாரம் செய்வதால் பரிகாரங்கள் பாரயணம் செய்யும் மந்திர ஜபமாக இருப்பது மிகவும் நன்மை தரும். வீடும் நாடும் நலம் பெற குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து சாந்தி மந்திரத்தை ஆத்மார்த்தமாக ஜெபித்து வர பிரபஞ்ச சக்தி அளவிட முடியாத நன்மைகளை வழங்கும்.
ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனது ஸஹ வீர்யம்
கரவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி
இந்த சனிப்பெயர்ச்சி அனைவரின் வாழ்விலும் தித்திப்பான மாற்றமும், மகிழ்ச்சியும் ஆனந்தமும், நிறைந்த செல்வமும், நோயற்ற வாழ்வும் நிரந்தரமாக வழங்க பிரபஞ்ச தாயின் ஆசிர்வாதம் பரிபூர்ணமாக கிடைக்க வேண்டுகிறேன்.