2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் முறையே 11 இயந்திர படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 11 இந்திய கடற்றொழிலாளர்கள் ஜனவரி 27 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இலங்கையின் யாழ். நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.
இதனையடுத்து ராமேஷ்வரம் கடற்றொழிலாளர் சங்கங்கள் சார்பில் அவசர உள்ளக கூட்டம் இடம்பெற்றுள்ளது.
தமிழக மத்திய அரசுகள் தலையீடு
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் ஜேசுராஜா, 11 இயந்திர படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.
தமிழக மத்திய அரசுகள் தலையிட்டதையடுத்து சிறையில் இருந்த அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் படகுகள் இலங்கையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
பலமுறை வேண்டுகோள் விடுத்தும் இலங்கை அரசு படகுகளை விடுவிக்கவில்லை.
இந்தநிலையிலேயே ஜனவரி 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர்
எனவே இந்த விடயத்தில் தமிழக முதல்வர் தமக்கு உதவவேண்டும் என்று ஜேசுராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
11 கடற்றொழிலாளர்கள் இலங்கைக்கு செல்லவும் படகுகளை மீண்டும் ராமேஸ்வரத்துக்கு கொண்டு வரவும் உதவி கோரி பல்வேறு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட குறிப்பாணை முதலமைச்சரின் சிறப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் ஜேசுராஜா தெ ஹிந்துவிடம் தெரிவித்துள்ளார்.