- முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது.
- தொடக்க ஆட்டக்காரர் திரிஷா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.
பெனோனி:
பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகளில் ‘டி’ பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் அங்கம் வகிக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
நேற்று இந்திய அணி தனது 3வது ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை பெனோனி நகரில் எதிர்கொண்டது. டாஸ் ஜெயித்த இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் திரிஷா 57 ரன்கள் எடுத்தார். ரிச்சா கோஷ் 33 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஸ்வேதா 10 பந்தில் 2 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய மகளிர் அணி துல்லியமாக பந்து வீசியது. மனாட் காஷ்யப் 4 விக்கெட்டும், அர்ச்சனா தேவி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இறுதியில், ஸ்காட்லாந்து அணி 13.1 ஓவர் முடிவில் 66 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. புள்ளிப்பட்டியலிலும் முதலிடம் பிடித்த இந்திய அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது.