- இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் ‘அயலி’.
- இந்த வெப்தொடர் வருகிற ஜனவரி 26 ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் ‘அயலி’. எட்டு எபிசோடுகள் அடங்கிய இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு 8- ஆம் வகுப்பில் கல்வி பயின்றுவரும் தமிழ் செல்வி என்ற சிறுமி கிராம மக்களிடம் உள்ள கற்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களை தகர்த்தெறிந்து மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக போராடுகிறார்.
இருப்பினும், வீரப்பன்னை கிராமத்தைச் சேர்ந்த இதர சிறுமிகளின் வாழ்க்கையில் ஒளி வீசச்செய்து ஒரு வழிகாட்டியாக திகழ்வதில் அவர் வெற்றி பெறுவாரா? என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த தொடர் வருகிற ஜனவரி 26 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
‘அயலி’ வெப் தொடர் குறித்து இயக்குனர் முத்துக்குமார் கூறியதாவது, “இன்று ஸ்ட்ரீமிங் தளங்கள் பொதுமக்களின் கண்ணோட்டத்தை வெற்றிகரமாக மாற்றியமைக்கக் கூடிய கதைகளை முன்வைக்கின்றன. மேலும் ஒரு பிரச்சாரமாக தோன்றாத வகையில் அந்த மாற்றத்துக்கான விதையை ஆழமாக விதைக்கும் எங்கள் உண்மையான முயற்சிதான் அயலி. இந்தத் தொடரானது, பெண்களின் கல்வி மற்றும் அதிகாரம் மற்றும் அவர்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடும் வயதுக்கு வந்த பெண்களின் ஒரு கதையாகும். இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றான இந்தக் கதையை காட்சிப்படுத்த எங்களுக்கு ஒரு தளத்தை வழங்கிய ஜீ5-க்கு நாங்கள் நன்றி பாராட்டுகிறோம்” என்று கூறியுள்ளார்.