- வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.
- தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
மூல நோய் ஏற்படும் காரணத்தை ‘அனில பித்த தொந்தமலாது மூலம் வராது’ என்று தேரையர் சித்தர் கூறுகிறார். வயிற்றில் அதிகரித்த வாயுவின் அழுத்தம், உடல் சூடு, நாள்பட்ட மலச்சிக்கல், அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு, உடல் பருமன், பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அடி வயிற்றில் ஏற்படும் அழுத்தம், பிரசவ நேரத்தில் ஏற்படும் வலி, அழுத்தம், நாள்பட்ட கல்லீரல் நோய்கள், ஆசனவாய் அருகில் உள்ள தசைகளில் ஏற்படும் பலவீனம், தண்ணீர் குறைவாக குடிப்பது, மாவுச்சத்துள்ள உணவுகள், எண்ணெய் பலகாரங்களை அதிகமாக உண்பது, எப்போதும் உட்கார்ந்து இருப்பது, நார்ச்சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது போன்ற காரணங்களால் மூல நோய் வருகிறது.
இந்த நோய்களை குணமாக்கும் சித்த மருந்துகள்:
1) திரிபலா சூரணம் ஒரு கிராம், நாகப்பற்பம் 100 மில்லி கிராம், நத்தை பற்பம் 100 மில்லி கிராம், இவைகளை வெந்நீரில் மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
2) கருணைக்கிழங்கு லேகியம், தேற்றான் கொட்டை லேகியம் இவைகளை தலா ஒரு கிராம் வீதம் காலை இரவு இரு வேளை உண்ண வேண்டும்.
3) நிலவாகை சூரணம் ஒரு கிராம் வீதம் இரவு ஒரு டம்ளர் வெந்நீரில் தூங்குவதற்கு முன்பு சாப்பிட வேண்டும்.
4) மூலக்குடார நெய் 5 மி.லி. இரவு ஒரு வேளை சாப்பிட வேண்டும்.
உணவுகள்: துத்திக் கீரையுடன் சிறு வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசிய வைத்து இரவு உண்ணலாம். கருணைக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி புளி சேர்த்து குழம்பாக வாரம் இரு முறை பயன்படுத்தி வரலாம். பிரண்டைத் தண்டை துவையல் அல்லது பொடியாக செய்து பயன்படுத்தலாம். முள்ளங்கி காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கோவைக்காய், கீரைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)