இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 37 வயதான ஆஷிஷ் நெக்ரா, அடிக்கடி காயத்தில் சிக்குகிறார். உடல்தகுதி பிரச்சினை காரணமாக, 2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு அவர் சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை. குறுகிய வடிவிலான 20 ஓவர் கிரிக்கெட்டில் மட்டும் ஆடுகிறார்.
இந்த நிலையில் நெக்ரா நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் மாதம் அரங்கேறுகிறது. இந்த போட்டியில் நான் விளையாட விரும்புகிறேன்.
இங்கிலாந்து ஆடுகளங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். குறைந்தது இங்கு 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டி இருக்கும். தொடக்கம், மிடில், இறுதி கட்டம் என்று எந்த பகுதியிலும் என்னால் பந்து வீச முடியும். அது மட்டுமின்றி எனது அனுபவத்தை மற்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.
உடல்தகுதியை மேம்படுத்திக்கொள்ள விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் குறைந்தது 3 ஆட்டங்களில் விளையாட திட்டமிட்டுள்ளேன். ஹசாரே கோப்பை போட்டி 50 ஓவர் வடிவில் நடப்பதால், எனது உடல்தகுதியை பரிசோதித்துக் கொள்ள இது நல்ல வாய்ப்பாகும்’ என்றார்.