எரிபொருட்கள் விற்பனையின் ஊடாக அரசாங்கத்திற்கு பாரியளவில் லாபம் கிடைக்கப் பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய ஒன்றிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித இந்த தகவல்களை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருந்தால் பெட்ரோலின் விலை மட்டுமன்றி ஏனையவற்றின் விலைகளும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், இலங்கை பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபனம் 8 பில்லியன் ரூபா லாபமீட்டுவதாகத் தெரிவித்து கடந்த டிசம்பர் மாதம் 200 கோடி ரூபா ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருட்கள் மீதான வரி
ஒரு லீட்டர் பெட்ரோல் விற்பனையின் மூலம் 75 ரூபாவும், ஒரு லீட்டர் டீசல் விற்பனையின் மூலம் 60 ரூபாவும், ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விற்பனையின் மூலம் 155 ரூபாவும் லாபமீட்டப்படுகின்றது.
பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபனம் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகையை ஈடு செய்ய எரிபொருட்கள் மீது வரியை சுமத்தி அந்தச் சுமையையும் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை ஏற்றத்திற்கான காரணத்தை பொறுப்பு வாய்ந்தவர்கள் மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும் என ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விற்பனையின் மூலம் பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபனம் லாபமீட்டிய போதிலும் ஏனைய செலவுகளை ஈடு செய்யும் நோக்கில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதாக கூட்டுத்தாபன ஊழியர் ஒருவர் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.