- இன்று முதல் 6-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
- 5-ந்தேதி பவுர்ணமி தினத்தன்று மழை பெய்தால் அனுமதி இல்லை.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் இன்று மற்றும் நாளை (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
மேலும் 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பவுர்ணமி தினத்தன்று மழை பெய்தால் அனுமதி இல்லை. மழை பெய்யவில்லை என்றால் அன்று அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பக்தர்கள் யாரும் அனுமதி இல்லாத நாட்களில் தாணிப்பறை வனத்துறை கேட் முன்பு வர வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.