- இந்தியாவில் டுவிட்டர் புளூ சேவையின் கீழ் பயனர்களுக்கு புளூ டிக் வழங்கப்படுகிறது.
- டுவிட்டர் புளூ சேவைக்கான இந்திய விலை மாதம் ரூ. 650-இல் இருந்து துவங்குகிறது.
டுவிட்டர் நிறுவனம் இந்தியாவில் தனது டுவிட்டர் புளூ சேவையை சமீபத்தில் துவங்கியது. மேலும் டுவிட்டர் புளூ சேவைக்கான சந்தா கட்டணம் வலைதளத்திற்கு மாதம் ரூ. 650, ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் செயலிகளுக்கு மாதம் ரூ. 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எலான் மஸ்க் அறிவித்து இருக்கும் டுவிட்டர் புளூ சேவையின் மிகமுக்கிய அம்சமாக புளூ டிக் உள்ளது. டுவிட்டர் புளூ சேவையில் கட்டணம் செலுத்தும் அனைவருக்கும் புளூ டிக் வழங்கப்பட்டு விடும். முன்னதாக இந்த புளூ டிக் டுவிட்டர் நிறுவனம் நடத்திய ஆய்வை அடுத்து வழங்கப்பட்டு வந்தது. தற்போது இது மாதிரி டுவிட்டர் ஏற்கனவே ஆய்வு செய்து வழங்கி வந்த புளூ டிக் விரைவில் நீக்கப்பட்டு விடும் என எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.
டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க்-ஐ டேக் செய்த நபர் ஒருவர், “தற்போது புளூ வெரிஃபிகேஷன் மார்க் ஜோக் ஆகி விட்டது. முன்னதாக புளூ டிக் வெரிஃபிகேஷன் பொது நபர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று யார் வேண்டுமானாலும் வெரிஃபிகேஷன் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது.” என தெரிவித்து இருந்தார்.
இவரது பதிவிற்கு பதில் அளித்த எலான் மஸ்க் விரைவில், “அந்த மாதிரி வழங்கப்பட்டு இருந்த புளூ டிக் விரைவில் நீக்கப்பட்டு விடும். இதுபோன்ற புளூ டிக் கொண்டவர்கள் தான், உண்மையில் ஊழல்வாதிகள் ஆவர்,” என தெரிவித்து இருக்கிறார்.
எலான் மஸ்க் அளித்த பதிலுக்கு பலர் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டனர். பலர், எலான் மஸ்க் எப்படி ஒருவர் ஊழல்வாதி என்பதை அறிந்து கொள்கிறார் என கேள்வி எழுப்பி இருக்கிறார். மற்றொருவர் ஏற்கனவே வழங்கப்பட்டு இருந்த புளூ டிக் நிறம் மாற்றி வேறு நிறத்தில் டிக் வழங்கலாம் என குறிப்பிட்டு இருக்கிறார்.