தமிழக சட்டசபையில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளை பரப்பன அக்ரஹாரா சிறையில் பார்த்து ரசித்தார் சசிகலா. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்ற பெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதனை பரப்பன அக்ராஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா டிவியில் பார்த்து ரசித்தாராம். நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏக்கள் ஆதரவு பெற்று வெற்றி பெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு தொலைபேசி மூலம் சசிகலா வாழ்த்து கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறையில் சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று உள்ள சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறையில் சாதாரண அறையே ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு தொலைக்காட்சி வசதி இல்லை.
டிவி பார்த்த சசிகலா
சனிக்கிழமையன்று டிவி பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று வியாழக்கிழமை இரவே சிறை அதிகாரிகளிடம் சசிகலாவும் இளவரசியும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து சசிகலா, இளவரசி ஆகியோருக்கு வேறொரு அறையில் டிவி பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.
சசிகலா வாழ்த்து
சட்டசபை நிகழ்ச்சிகளை டிவியில் பார்த்த சசிகலா மகிழ்ச்சியடைந்தாராம். இதனையடுத்து அவரை காண வந்த வழக்கறிஞர்களை சந்தித்த சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமும், அமைச்சர்களிடம் தொலைபேசி மூலம் பேசி வாழ்த்து கூறினாராம். நேற்றிரவு 7 மணி வரை சில ஆலோசனைகளையும் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.