போர்க்குற்ற நீதிமன்றங்களை அமைக்கும் விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அண்மையில் வெளியிட்டு வருகின்ற கருத்துக்களில் முரண்பாடுகளை அவதானிக்க முடிகின்றது.
தற்போதைய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக இருப்பவர் சந்திரிகா.
நம்பகமான போர்க்குற்ற விசாரணை ஒன்றுக்குச் சார்பாகவே இவர் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் பொதுவெளியில் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் தொடர்பாக அரச தரப்பில் இருந்து முரண்பட்ட கருத்துக்கள் அவ்வப்போது வெளிவந்தாலும் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் தெளிவான கருத்துக்களை ஆரம்பத்திலிருந்தே வெளிட்டு வந்தனர்.
ஆனால் இப்போது சந்திரிகா குமாரதுங்கவின் நிலைப்பாட்டில் தளம்பல்கள் உருவாகி இருக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு அவரது கருத்துக்களில் குழப்பங்களை அவதானிக்க முடிகிறது.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இம்மாத தொடக்கத்தில் அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் போர்க்குற்ற விசாரணை அவசியமற்றது என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்போது அவசியம் தேவைப்படுவது புதிய அரசியல் அமைப்பும் காணமல் போனோருக்கான பணியகமும் தான்.
இவை நடைமுறைக்கு வந்ததும் போர்க்குற்ற விசாரணைக்கான நீதிமன்றங்களுக்கான தேவை இல்லாமல் போய்விடும் என்று அவர் கூறியிருந்தார்.
கடந்த வாரம் சந்திரிகா குமாரதுங்க கொழும்பிலுள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதும் அவர் போர்க்குற்ற விசாரணையை விடவும் அரசியல் அமைப்பு மாற்றமே முக்கியமானதென்று வலியுறுத்தியிருக்கிறார்.
போர்க்குற்ற விசாரணை பற்றி இப்போது பேசினால் அரசியலமைப்பு மாற்றம் தடைபட்டு விடும் என்றும் இப்போதைய நிலையில் அரசியலமைப்பு மாற்றமே முக்கியமானது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதைவிடப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை நல்லிணக்கச் செயன்முறையின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டிருந்தாலும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்பதை விட தமிழ் மக்கள் தமது எதிர்காலம் குறித்தே அதிகம் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதன்மூலம் அவர் பொறுப்புக்கூறல் என்பதை தமிழ் மக்கள் கடந்து செல்லத் தொடங்கி விட்டார்கள் என்பதையே கூற வருகிறார்.
தமிழ் மக்கள் போர்க்குற்றங்களையும் பொறுப்புக்கூறலையும் மறக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களுக்கு இப்போது எதிர்காலம் பற்றிய அக்கறை மாத்திரமே இருக்கிறது என்றே அவரது கருத்து அமைந்திருக்கிறது.
நல்லிணக்கம் என்பது பொறுப்புக்கூறலில் தான் ஆரம்பிக்க வேண்டும். நல்லிணக்கச் செயன்முறையின் ஓர் அங்கம் தான் பொறுப்புக்கூறல் என்று இல்லை. பொறுப்புக்கூறலில் இருந்து தான் நல்லிணக்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன.
பொறுப்புக்கூறலை தமிழ் மக்கள் கடந்து செல்லத் தலைப்பட்டு விட்டனர் என்ற கருத்தினூடாக அவர் சொல்ல வருவது புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் போர்க்குற்ற விசாரணைகள் தேவையற்றது என்பதுதான்.
குற்றமிழைத்தவர்களும் அப்படியே இருக்க பாதிக்கப்பட்டவர்களும் நீதி கிடைக்காமல் இருக்க நல்லிணக்கத்தை நோக்கித் தமிழ் மக்களால் எவ்வாறு செல்ல முடியும்?
புதிய அரசியலமைப்பு ஒன்று நாட்டுக்கு அவசியமானது என்பதை மறுக்க முடியாது. தமிழர்களுக்கும் ஏனைய இனத்தவர்களுக்கும் அது தேவையானதே.
ஆனால் புதிய அரசியல் அமைப்புக்காக போர்க்குற்றங்களையும் மறந்து விடுங்கள் அது பற்றிய விசாரணைகளை மறந்து விடுங்கள் என்று கேட்கின்ற உரிமை சந்திரிகா குமாரதுங்கவுக்கோ அல்லது வேறு எவருக்குமோ கிடையாது.
சந்திரிகா குமாரதுங்க இப்போது நல்லிணக்க பணியகத்தின் தலைவராக இருக்கலாம். ஆனால் அவரும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது தமிழ் மக்களால் போர்த் தேவதை என்று வர்ணிக்கப்பட்டவர்.
அவரது ஆட்சியில் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்களும் அழிவுகளும் சாதாரணமானவை அல்ல. வலிகாமம் இடம்பெயர்வு, யாழ்ப்பாண இடம்பெயர்வு, கிளிநொச்சி இடம்பெயர்வு என்று ஏராளமான இடம்பெயர்வு அவலங்களை அவரது ஆட்சி கொடுத்திருந்தது.
அதைவிட நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயப் படுகொலை, மிருசுவில் படுகொலை, நாகர்கோவில் பாடசாலை படுகொலை, பிந்துனுவெவ படுகொலை, குமாரபுரம் படுகொலை என்று ஏராளமான படுகொலைகளை தமிழ் மக்கள் எதிர்கொண்டது சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் தான்.
இந்தப் படுகொலைகளில் மிருசுவில் படுகொலை தவிர வேறு எவற்றுக்கும் நியாயம் வழங்கப்படவில்லை. நீதியான விசாரணைகள் நடத்தப்படவும் இல்லை.
இவையெல்லாம் ஆட்சி அதிகாரத்தின் மையமாக விளங்கிய சந்த ரிகா குமாரதுங்கவுக்கு தெரியாத விடயமல்ல.
ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் தமிழ் மக்கள் எதிர்கொண்ட படுகொலைகள், அழிவுகள் எல்லாவற்றையும் மறந்து விட்டு புதிய அரசியலமைப்பின் பின்னால் ஒழிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு அக்கறை பற்றிப் பேசுவதற்கு சந்திரிகா குமாரதுங்கவுக்கு எந்த அருகதையும் கிடையாது. அவர் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி அல்ல.அல்லது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டவரும் அல்ல.
சந்திரிகாவின் நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி நாடு முழுவதிலும் நடத்திய ஆய்வுகளின் முடிவுகளை ஒரு அறிக்கையாக அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருந்தது. அரசாங்கத்தின் சார்பில் அந்த அறிக்கையை சந்திரிகா குமாரதுங்கவே பெற்றிருந்தார்.
அந்த அறிக்கையில் சாட்சியமளித்த தமிழ் மக்களின் மனநிலை பற்றி தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.
போர்க்குற்றங்கள் குறித்து அவற்றுக்குப் பொறுப்புக்கூறப்பட வேண்டிய முறைகள் குறித்து தமது உரிமைகள் குறித்து புதிய அரசியலமைப்பு குறித்து எல்லாமே அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
அதை சந்திரிகா கருத்தில் கொள்ளவில்லை. அதனைக் கருத்தில் எடுத்திருந்தால் அவரிடமிருந்து இப்படியொரு கருத்து வெளிப்பட்டிருக்காது.
தமிழ் மக்கள் தமது எதிர்காலம் குறித்து சிந்திக்கிறார்கள் தான். ஆனால் அதற்காக போர்க்குற்றங்களையோ பொறுப்புக்கூறலையோ இரண்டாம் பட்சமானதாக ஒதுக்கி வைத்து விடவில்லை.
கலப்பு நீதிமன்ற பொறிமுறை குறித்த பரிந்துரையை முன்வைத்து விட்டது என்பதற்காக தமக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறிச் செயற்பட்ட குழு என்று இந்த நல்லிணக்க கலந்தாய்வு செயலணிக்கு முத்திரை குத்தியவர் தான் சந்திரிகா என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பு மாற்றம் தமிழ் மக்களுக்குத் தேவையானது. அதைவிடச் சிங்கள மக்களுக்கும் தேவையானது. பொறுப்புக்கூறல் என்பது தமிழ் மக்களால் தான் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் போர்க்குற்றங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் தான். அவர்களால் அரசியமைப்பு ஒன்றுக்காக பொறுப்புக்கூறலையோ போர்க்குற்றங்களையோ மறந்து கடந்து சென்றுவிட முடியாது.
அதைவிட புதிய அரசியலமைப்பு ஒன்றும் தமிழ் மக்களுக்கு உரிமைகளை அள்ளி வழங்கப்போகும் ஒன்றாகக் கூட இருக்கப் போவதில்லை. தமிழ் மக்கள் கேட்கின்ற சமஷ்டியை புதிய அரசியலமைப்பு மூலம் உத்தரவாதப்படுத்த சந்திரிகா குமாரதுங்க போன்ற தலைவர்கள் தயாராக இருக்கின்றார்களா?
13வது திருத்தத்துக்கு அப்பால் எதையும் செய்யமாட்டோம் என்று முரண்டு பிடிக்கும் சிங்களத் தலைமைகளின் புதிய அரசியலமைப்பு பற்றிய ஆசை வார்த்தைகளுக்காக போர்க்குற்றங்களை மறந்து விடுவதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் தயாராகப் போவதில்லை.
காலத்தை இழுத்தடிப்பதால் போர்க்குற்றங்கள், போர்க்குற்ற விசாரணைக்கான அழுத்தங்களை நீர்த்துப் போகச் செய்து விடலாம் என்ற நம்பிக்கை சிங்களத் தலைமைகளிடம் இருக்கின்றன என்பதை சந்திரிகாவின் இந்தக் கருத்து உணர்த்தியிருக்கிறது.
தமிழ் மக்கள் நல்லிணக்கத்துக்கு விரோதமானவர்கள் இல்லை நல்லிணக்கத்தை ஏற்படுத்த தடையாகவும் அவர்கள் இல்லை. ஆனால் நல்லிணக்கம் என்ற பெயரில் தமது உரிமைகள் நசுக்கப்பட்டு தமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதை அவர்களால் ஒருபோதும் ஜீரணிக்க முடியாது.
புதிய அரசாங்கத்திடம் தமிழ் மக்கள் நிறையவே எதிர்பார்த்தார்கள். ஏராளம் மாற்றங்கள் நிகழும் என்று நினைத்தார்கள். ஆனால் நடந்தது என்ன? இன்னமும் காணிகளுக்கான போராட்டங்கள் நீள்கின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் போராட்டங்கள் தொடர்கின்றன. அரசியல் கைதிகளின் விடுதலை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. பொறுப்புக்கூறல் பொறிமுறை வாக்குறுதிகள் கரைந்து கொண்டிருக்கின்றன.
புதிய அரசியலமைப்பில் சமஷ்டி பற்றிய கோரிக்கைகளையும் நிராகரிக்கின்ற நிலையே நீடிக்கின்றது. இப்படியாக தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள முடியாத வகையில் தான் அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கின்ற வகையில் தான் அரசாங்கம் செயற்படுகிறது.
இப்படியானதொரு நிலையில் பொறுப்புக்கூறலை மறந்து புதிய அரசியலமைப்புக்கான கனவில் மிதப்பதற்கு தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. பொறுப்புக்கூறலுக்கான போராட்டம் என்பது அரசியலமைப்புக்கான போராட்டத்தை விட வலுவானது. வலிமையானது.
போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு இதனை மறக்கச் செய்வது முக்கிய தேவையாக இருக்கலாம். ஆனால் போர்க்குற்றங்களின் வலியுடன் வாழும் தமிழ் மக்கள் அதிலிருந்து விடுபட்டு நல்லிணக்கத்தை நோக்கி வரவேண்டுமானால் போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
இந்த உண்மையை உணராமல் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் கானலாகத்தான் கரைந்து போகும்.