நீதவான் ஒருவரை வீட்டில் அடைத்து வைத்து விட்டு,அவரது உத்தியோகப்பூர்வ காரை திருடிச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கொழும்பின் புறநகர் பிலியந்தலை – மடபாத பகுதியில் நீதவான் ஒருவரை இரண்டு மாடி வீட்டில் அடைத்து வைத்து விட்டு, அவரது 6 மில்லியன் ரூபா பெறுமதியான உத்தியோகப்பூர்வ காரை திருடிச் சென்றுள்ளனர்.
குளியாப்பிட்டிய மேலதிக மாவட்ட நீதிவான் அமில ஸ்ரீசம்பத் என்பவருடைய உத்தியோகப்பூர்வ காரே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் நேற்று(11.02.2023) பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதவானின் இணையத்தள விளம்பரம்
பிலியந்தலை மடபாதவில் உள்ள தனது சொகுசு வீட்டை வாடகை அடிப்படையில் வழங்கப்போவதாக நீதவான் இணையத்தளம் ஒன்றில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தனது வீட்டை வாடகைக்கு எடுக்க விரும்பிய நபரை சந்திப்பதற்காக நீதவான் தனது சொகுசு காரில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்தநிலையில் குறித்த நபர் அந்த இடத்துக்கு முச்சக்கரவண்டி ஒன்றில் சென்றுள்ளார்.
பொலிஸாரின் கருத்து
பின்னர், நீதவான் தமது வீட்டைக் காண்பிக்கும் போது குறித்த நபர் நீதவானை மாடி அறையில் வைத்து பூட்டி விட்டு நீதவானின் சொகுசு காருடன் தப்பிச் சென்றுள்ளார்.
இதேவேளை குறித்த நபர் காருடன் தப்பிச் செல்வது சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் கூறுகையில்,நீதவான் தனது காரின் சாவியை கீழ் மாடியில் வைத்திருந்ததால் சந்தேகநபர் காருடன் தப்பிச் செல்ல முடிந்துள்ளது.
எனினும், நீதவான், பூட்டப்பட்டிருந்த அறையின் ஜன்னல் வழியாக குதித்து வெளியில் வந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.