ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக்கு புறம்பாக மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிப்பது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் சட்டத்தரணியாக பணியாற்றிய இராமநாதன் கண்ணன் என்பவரை ஜனாதிபதி மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமித்துள்ளதை நீதிச்சேவை சங்கங்கள் கடுமையாக எதிர்த்துள்ளன.
உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களுக்குமான நீதிபதிகள் நீதிச்சேவை அல்லது சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுக்குள் இருந்து தெரிவு செய்து நியமிப்பதே நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை.
சிரேஷ்டத்துவம் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதன் மூலமே நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படும். அரிதாக உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பணியாற்றும் ஒருவர் நீதியரசராக நியமிக்கப்படுவதுண்டு.
முன்னாள் பிரதம நீதியரசர் நெவில் சமரகோன், முன்னாள் நீதியரசர் மார்க் பெர்னாண்டோ இவ்வாறு உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டனர். நான் 9 ஆண்டுகளாக ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தனியாக செயற்பட்ட சட்டத்தரணிகளில் ஒருவரை மாத்திரமே உயர் நீதிமன்றத்திற்கு நியமித்தேன்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கோ மேல் நீதிமன்றத்திற்கோ ஒரு சட்டத்தரணியையும் நீதிபதிகளாக நியமிக்கவில்லை.
நீதிச்சேவை சங்கம் இது குறித்து நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவிடம் வினவிய போது, இதற்கு முன்னர் இராமநாதன் கண்ணனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு ஒரு அரசியல் கட்சி கோரியதாகவும் அதற்கு தான் இணங்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
அரசியல் கட்சி ஒன்றின் கோரிக்கைக்கு அமைய நீதிபதிகள் நியமிக்கப்பட்டால் நீதித்துறையின் முழு சுதந்திரமும் சிதறி போகும்.
நீதித்துறையில் 16 வருடங்களுக்கு மேலான அனுபவங்களை கொண்ட நீதிபதிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் இருக்கும் போதே கண்ணன் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக தமிழ் பேசும் நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமாயின் வவுனியா மாவட்ட நீதிபதியான டி.எல்.ஏ. மனாஸே அதற்கு தகுதியானவர் என நீதி சேவை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீதி சேவை அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்திற்குள் பணியாற்றும் தமிழ் பேசும் ஒருவரை நீதிபதியாக நியமித்திருந்தால், அதனை யாரும் எதிர்க்க மாட்டார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நடு நிலையற்ற விசாரணையாளர்கள் மூலம் அவருக்கு எதிராக விசாரணை நடத்தி பதவியில் இருந்து நீக்கினர்.
சட்டமாக அதிபராக பதவிக்கு ஓய்வுபெற்றுச் சென்ற மொஹான் பீரிஸை பிரதம நீதியரசராக மகிந்த ராஜபக்ச நியமித்தார். மேலும் சட்டமா அதிபர் திணைக்களத்தை நேரடியாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
அதன் மூலம் வழக்கு விசாரணைகளை தமது அரசாங்கத்திற்கு சாதகமான வகையில் மாற்றிக்கொண்டதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.