பிரித்தானியாவில் Hackney பகுதியில் அமைந்துள்ள துருக்கி சமூக மக்களின் மசூதி ஒன்றில் கிடைக்கப்பெற்ற கடிதம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அதிக இஸ்லாமியர்கள் இறக்கவில்லை என்ற ஏமாற்றத்தை அந்த கடிதம் வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லண்டனில் உள்ள துருக்கி சமூக மக்கள் தங்களால் இயன்ற பொருட்களை திரட்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
ஏமாற்றத்தை வெளிப்படுத்திய கடிதம்
இந்த நிலையில் தான் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற கடிதம் ஒன்று தொடர்பில் முக்கிய தலைவர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறகையில்,“இப்படியான ஒரு கடிதம் எழுதியவருக்காக, இந்த இக்கட்டான சூழலிலும் கடவுளிடம் மன்றாடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை, காரணம் அவர் உதவி தேவைப்படும் மன நிலையில் இருக்கிறார்.
முதலில் அந்த கடிதம் ஒரு இரங்கல் செய்தியாக இருக்கும் என்றே நம்பினோம். ஆனால் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் எம்மை வருத்தமடைய செய்துள்ளது.
அதிக இஸ்லாமியர்கள் நிலநடுக்கத்தில் இறக்காமல் போன வருத்தத்தில் இந்த கடிதம் எழுதுவதாக அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரிடம் கடிதம் ஒப்படைப்பு
2 மில்லியன் இஸ்லாமியர்கள் வரையில் இறக்க கூடும் என கருதியதாகவும், ஆனால் தற்போதைய எண்ணிக்கை வருத்தமளிப்பதாகவும் அந்த நபர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சமூக மக்கள் அதிகமானோர் இறக்கவில்லை என வருந்துவது குற்றச்செயல் எனவும், இந்த கடிதத்தை பொலிஸாருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.”என தெரிவித்துள்ளார்.
லண்டனில் வசிக்கும் பெரும்பாலான துருக்கி மற்றும் சிரியா மக்கள் பெப்ரவரி 6 ஆம் திகதி ஏற்பட்ட இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் தமது உறவுகளை இழந்துள்ளனர்.
இதுவரையில் 41,000 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும், சம்பவம் நடந்து 9 நாட்கள் கடந்தும் ஆயிரக்கணக்கானோர் இன்னமும் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.