யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரால் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி பயிலும் தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மையின மாணவர்கள் சிலர், பல்கலைக்கு வெளியில் தங்கி தமது கல்வியை தொடர்ந்து வருகின்றார்கள். அவ்வாறு வெளியில் தங்கியுள்ள மாணவர்களை தாம் தங்கியுள்ள விடுதிக்கு வந்து தங்குமாறு ஏனைய பெரும்பான்மையின மாணவர்கள் அழைத்துள்ளனர்.
எனினும் குறித்த மாணவர்கள் செல்லாத காரணத்தால் நேற்று இவர்களுக்கிடையில் வாக்குவாதம் இடம்பெற்று கைகலப்பாக மாறியுள்ளது. குறித்த சம்பவத்தின்போது தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இன்று(ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு வருமாறு 7 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, பல்கலைக்கழகத்திற்கு வெளியில் வீடொன்றில் தங்கியிருந்த மாணவர்களை தேடிச் சென்று ஏனைய மாணவர்கள் நடத்திய தாக்குதலிலேயே நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த மாணவர்களுள் ஒருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரால் 6 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டதோடு, விசாரணையின் பின்னர் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.