ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த நாட்களில் மற்றுமொரு அரசியல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி பதவியோ அல்லது பிரதமர் பதவியோ இல்லாமல் தேர்தல் நடத்தப்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகவும் ஆபத்தான நிலையை சந்திக்க நேரிடும் என்பதை அக்கட்சியின் தலைவர்கள் உணர்ந்துள்ளமையே இதற்குக் காரணம் எனவும் கூறப்படுகின்றது.
தினேஷ் குணவர்தனவுக்கு கடும் அழுத்தம்
எனவே, தற்போதைய அரசியல் நெருக்கடியை ஓரளவுக்கு தணிக்க, பொதுஜன பெரமுனவுக்கு அரசாங்கத்தில் உயர் பதவி கிடைக்க வேண்டும் என பசில் உள்ளிட்டோர் கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முக்கிய தடையாக காணப்படும் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் என்பதனால், அவ்வாறானதொரு பிரேரணையை அவருக்கு திடீரென முன்வைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே கடந்த வாரம் ராஜபக்ச குடும்பத்தினர் உத்தியோகபூர்வமற்ற முறையில் இச்செய்தியை அவருக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்ததாகவும், பிரதமராக பதவியேற்க மகிந்தவுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், பிரதமர் தினேஷ் குணவர்தன தரப்பிலிருந்து இதுவரை பதில் வரவில்லையெனவும், தொடர்ச்சியாக பலர் இது தொடர்பில் அவருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.