ஜெனீவாவில் அடுத்த வாரம் கூடவிருக் கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடரில், ‘காலஅவகாசம்’ கோருவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியிருக்கின்றது.
கடந்த 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கே, அரசாங்கம் மேலும் காலஅவகாசம் கோரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்தார்.
எனினும், எவ்வளவு கால அவகாசத்தை அரசாங்கம் கோரவுள்ளது என்ற தகவலை அவர் வெளியிட்டிருக்கவில்லை. ஆனால், 18 மாத காலஅவகாசம் கோருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இந்தச் சூழலில், கடந்த திங்கட்கிழமை, ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடருக்கான ஒழுங்கமைப்புக் கூட்டத்தில், இலங்கை தொடர்பான தீர்மானத்தை தாம் முன்வைக்க இருப்பதாக பிரித்தானியா அறிவித்திருக்கிறது.
கடந்த 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் தொடர்ச்சியாகவும், அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசத்தை வழங்கும் வகையிலும் இந்தத் தீர்மானத்தை முன்வைக்க பிரித்தானியா தயாராகியிருக்கிறது.
இந்தச் சூழலில் தான், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாகவும், அவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டால், அதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனே பொறுப்பேற்க வேண்டும் என்றும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருந்தார்.
இப்போது, யார் எதைச் செய்தாலும், சம்பந்தனே அதற்குப் பொறுப்பு என்று குற்றம்சாட்டும் ஒரு பாணி தமிழ் அரசியல் சூழலில் உருவாகியிருக்கிறது.
காணாமல் போனவர்கள் விவகாரத்திலாயினும், அரசியல் கைதிகள் விவகாரத்திலாயினும், காணிகள் விடுவிப்பு விவகாரத்திலாயினும் சம்பந்தன் மீது குற்றம்சாட்டுவது, அவருக்கு எதிரான தரப்பினருக்கு ஒரு நோயாகவே மாறியிருக்கிறது.
அதன் நீட்சியாகத் தான், ஐ.நாவில் கால அவகாசம் வழங்கப்பட்டால் அதற்கும் சம்பந்தனே பொறுப்பு என்று, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
ஆனால் மேற்கூறப்பட்ட விவகாரங்களில், தமிழ் மக்களின் தரப்பை பிரதிநிதித்துவம் செய்பவராக மாத்திரம் சம்பந்தன் இருக்கிறாரே தவிர, முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் அவர் இல்லை என்பதை எல்லோரும் வசதியாக மறந்து விடுகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக எல்லாவற்றையும் அரசியலாக்குவதில் தான், அவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
இந்த உள்வீட்டுச் சண்டையை வெளித்தரப்பு பயன்படுத்திக் கொள்வது பற்றி, கூட்டமைப்போ அல்லது கூட்டமைப்புக்கு எதிராக அரசியல் நடத்துபவர்களோ கண்டுகொள்வதில்லை.
ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் கால அவகாசத்தைக் கோரப் போகிறது என்பது உண்மை. ஆனால், இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தை அரசாங்கம் கோருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா என்பது சந்தேகம்.
ஏற்கனவே, இலங்கை அரசாங்கத்துக்கு 2015 ஒக்டோபர் தொடக்கம், ஒன்றரை ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. (அது வரையறுக்கப்படாத காலஅவகாசம்)
எனவே பொறுப்புக்கூறல்தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற இரண்டு ஆண்டு கால அவகாசத்தை அர சாங்கம் கோருவதற்கு வாய்ப்புகள் குறைவு. அவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டால் அதனை இழுத்தடிக்கும் உத்தியாகவே சர்வதேசம் கருதும்.
எனவே முடிந்த வரைக்கும் காலஅவகாசத்தை வரையறை செய்த ஒன்றாக அரசாங்கம் கோராது. திறந்த கால அவகாசத்தைக் கோரினால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் வரையறைகள் இருக்காது.
அதேவேளை, இலங்கை கால அவகாசத்தைக் கோரும் போது, எவ்வளவு காலம் தேவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் முயற்சிக்கலாம்.
அந்தக் கட்டத்தில் தான், இலங்கைக்கு வழங்கப்படும் கால அவகாசத்தின் எல்லை தீர்மானிக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.
இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் கோரப்படவுள்ளதே, என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள இரா.சம்பந்தன், பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்குப் பதிலளிப்பதில் அரசாங்கம் மெத்தனப் போக்கில் இருப்பதாகவும், இது தமிழ் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியிருந்தார்.
அத்துடன், காலஅவகாசம் வழங்குவதாயின், சர்வதேச கண்காணிப்புடனேயே அது இடம்பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.அந்த இடத்தில், அவர் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவில்லை.
ஆனால், சர்வதேச கண்காணிப்புடன் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சம்பந்தன் கூறியது போல அவரது கருத்து இப்போது ஊடகங்களில் திரிபடைந்துள்ளது.
அதேவேளை, இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுவதை தாம் எதிர்ப்பதாகவும், கால அவகாசம் வழங்கப்பட்டால், தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசம் மறந்து விடும் என்றும் அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
இலங்கை அரசாங்கம் கால அவகாசத்தைக் கோருவதை மையப்படுத்தி, தமிழர் தரப்பில் இத்தகைய கருத்துக்கள் வெளிவந்திருக்கின்ற போது, யதார்த்தம் என்ற ஒன்றை எல்லோரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
அது தான், இலங்கை கேட்டுக் கொண்டாலும் சரி, கேட்டுக் கொள்ளாவிடினும் சரி, சர்வதேச சமூகம் வழங்கப் போகிற வாய்ப்பு. ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகள் கால அவகாசம் இருந்தது, அதனை அரசாங்கம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இந்தநிலையில், இலங்கைக்கு மேலதிக காலஅவகாசத்தை வழங்குவதை விட, வேறொரு தெரிவு ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
இப்போதைய நிலையில், இலங்கை அரசாங்கத்துடன் இணங்கிச் சென்று பொறுப்புக்கூறல் உள்ளிட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதையே, ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவை விரும்பும்.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் போல, இந்த அரசாங்கம் சர்வதேசத்துடன் முரண்டு பிடிக்கவில்லை. எனவே, இலங்கையின் கோரிக்கையைத் தட்டிக் கழித்துக் கொண்டு, அடுத்த கட்டம் பற்றிச் சிந்திக்க முடியாது. இலங்கை அரசாங்கத்துடன் இணைந்தே செயற்படுவதற்கே முனையும்.
அதைவிட, 2015ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், எந்த இடத்திலுமே இலங்கைக்கு இந்தப் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை. இதனை, ஏற்கனவே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனும் கூறியிருக்கிறார்.
இந்தநிலையில், குறிக்கப்பட்ட காலத்துக்குள் ஏன் பரிந்துரைகளை நிறைவேற்றவில்லை என்று, இலங்கையின் கழுத்தைப் பிடிக்க முடியாது. அடுத்த கட்டத்துக்கு செல்லப் போகிறோம் என்று கூறிவிடவும் முடியாது,
அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், எந்தக் காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை என்பதை இலங்கை சுட்டிக்காட்டும், தீர்மானத்தின் ஏனைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை எடுத்துக்கூறும். அதுபற்றி ஐ.நா. அறிக்கையாளர்கள் சமர்ப்பித்த அறிக்கைகளையும் தூக்கிப் போடும்.
இத்தகைய நிலையில், மீண்டும் கால அவகாசம் ஒன்றை வழங்கும் முடிவை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை எடுத்தேயாக வேண்டிய நிலை ஏற்படும்.
மாறாக, குறித்த கால அவகாசத்துக்குள் பொறுப்புக்கூறல் பொறிமுறையை அமைக்கவில்லை என்ற காரணத்துக்காக, ஒரு சுதந்திர போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையை ஜெனீவா உருவாக்கி விடாது.
அதற்கான வாய்ப்புகளும் சூழலும் ஜெனீவாவில் இல்லை என்பது தெரிந்த விடயம் தான். இந்த நிலையில் தான் மீண்டும் இலங்கைக்குக் கால அவகாசத்தை வழங்கி ஒரு புதிய தீர்மானத்தை முன்வைக்க பிரித்தானியா தயாராகிறது.
அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இலங்கை தொடர்பான தெளிவான ஒரு நிலைப்பாடுகள் எடுக்கப்படவில்லை.
எனவே, இந்தமுறை, ஜெனீவாவில் அமெரிக்காவின் செல்வாக்கோ தலையீடுகளோ அதிகம் இருக்காது.இதனால் தான், பிரித்தானியாவை முன்வைத்து, இந்த தீர்மானத்தை கொண்டு வரும் முயற்சிகள் நடக்கின்றன.
இதில் இந்தியாவின் ஆதரவை கோருவதற்கும் அரசாங்கம் முயற்சிக்கிறது. அமெரிக்காவின் வலுவான ஆதரவில்லாமல், பிரித்தானியாவின் தலைமையில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு.
இலங்கை அரசாங்கம் இப்போது சர்வதேச ஆதரவை அதிகரித்திருக்கிறது. எனவே, வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐரோப்பிய நாடுகள் முன்வைத்தால் கூட,2009ல் கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில், ஏற்பட்ட நிலை தான் ஏற்படும்.
அத்தகையதொரு நிலைக்குச் செல்ல விடாமல், இலங்கைக்குக் கடிவாளம் போடுவதற்கு கால அவகாசம் ஒன்றை வழங்குவதே சிறந்தது என்றே பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முயற்சிக்கும்.
இலங்கை அரசாங்கத்தை தமது கைகளுக்குள் வைத்துக் கொள்வதற்கே மேற்குலகம் பிரதான கவனத்தைச் செலுத்தும். இது சர்வதேச அரசியல் சூழல். இதனை யாரும் கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களின் அடிப்படை நோக்கம், தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதல்ல.
இலங்கைக்கு கடிவாளம் போடும் எத்தனமே அங்கு நடந்து கொண்டிருந்தது, இப்போதும் அது தான் நடக்கப் போகிறது.
இந்த நிலையில், ஜெனீவா தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தும் சக்தி தமிழர் தரப்பிடம் முன்னரும் இருக்கவில்லை. இப்போதும் இருக்கவில்லை.
கால அவகாசம் வழங்கும் விவகாரத்தில் தலையிடும் அல்லது முடிவை மாற்றும் அதிகாரம் தமிழர் தரப்பிடம் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
ஏனென்றால், தமிழர் தரப்பு இங்கு வெறும் பார்வையாளர்கள் தான்.