உள்ளூராட்சித் தேர்தலை உரிய தினத்தில் நடத்த முடியாமல்போனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் வாக்களிப்பு இடம்பெறும் வரை செல்லுபடியாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டு பொது தேர்தலும் இவ்வாறே நடத்தப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேநேரம், நிதி இல்லாத காரணத்தினால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உறுதியளித்தவாறு நடத்த முடியாமல்போகும் நிலை ஏற்படும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரியவாறு நடத்த நடவடிக்கை எடுப்பதாக, தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் கடந்த 10ஆம் திகதி உறுதிப்பாட்டை வழங்கியிருந்தது.
எவ்வாறிருப்பினும், அந்த உறுதிமொழிக்கு அமைய நடவடிக்கை எடுப்பதற்கு இதுவரையில் நிதி கிடைக்கவில்லை என மனு ஒன்றின் மூலம் உயர்நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்த தேர்தல்கள் ஆணைக் குழு தீர்மானித்துள்ளது.