ஒவ்வொரு மாதமும் 50 முதல் 60 வரையான வைத்தியர்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்காக விடுமுறைக்கு விண்ணப்பிப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர், வைத்திய கலாநிதி சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
சில வைத்தியர்கள் விடுமுறை பெறாமல் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அரச வைத்தியசாலைகளில் பாதிப்பு
துரதிஷ்டவசமாக, நாட்டை விட்டு வெளியேறிய மருத்துவ நிபுணர்களின் பட்டியல் சுகாதார அமைச்சகத்திடம் இல்லை. எனினும் தமக்கு கிடைத்த தகவலின்படி கடந்த வருடம் 1000க்கும் அதிகமான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
நகர்ப்புறங்களில் உள்ள அரச வைத்தியசாலைகள் கூட வைத்தியர்களின் இடப்பெயர்வினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், கொழும்பு தேசிய வைத்தியசாலை, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலை மற்றும் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை போன்ற பிரதான வைத்தியசாலைகள் பெரிதும் பாதிக்கப்படவில்லை என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர், வைத்திய கலாநிதி சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார நிபுணர்களும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். புற மருத்துவமனைகளில் நிறைய மருத்துவ ஆலோசகர்கள் வெளியேறியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மை ஆகியவை மருத்துவர்களை விரட்டுகின்றன. அவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி கவலைப்படுகிறார்கள்.
தற்போதைய வரி அதிகரிப்பு மேலும் மருத்துவ நிபுணர்களை வெளியேறச் செய்யும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர், வைத்திய கலாநிதி சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.