- 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
- 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2- வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 262 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரைவிட 1 ரன் குறைவாகும். அக்ஷர் படேல் 74 ரன்னும், வீராட் கோலி 44 ரன்னும் எடுத்தனர்.
நாதன் லயன் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் சாய்த்தார். மர்பி , மேத்யூ குனேமேன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன் எடுத்து இருந்தது.
உஸ்மான் கவாஜா 6 ரன்னில் ஜடேஜா பந்தில் பெவிலியன் திரும்பினார். டிரெவிஸ் ஹெட் 39 ரன்னும், லபுஷேன் 16 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 62 ரன்கள் முன்னிலை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது.
சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோரது அபாரமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது.
டிரெவிஸ் ஹெட் 43 ரன்னிலும், அடுத்து வந்த ஸ்டீவ் சுமித் 9 ரன்னிலும், அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தனர். லபுஷேன் 35 ரன்னில் ஜடேஜா பந்தில் பெவிலியன் திரும்பினார்.
இருவரும் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். ரென்ஷா 2 ரன்னில் அஸ்வின் பந்தில் அவுட் ஆனார். ஹேண்ட்ஸ்ஹோம் (0), கேப்டன் கம்மின்ஸ் (0) ஆகியோரை ஜடேஜா அவுட் செய்தார்.
அதைத்தொடர்ந்து அலெக்ஸ் கேரி (7 ரன்), லயன் (8), மேத்யூ குனேமேன் (0) ஆகியோர் ஜடேஜாவின் அபார பந்து வீச்சுக்கு வெளியேறினார்கள். ஆஸ்திரேலிய அணி 31.1 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியாவுக்கு 115 ரன் இலக்காக இருந்தது.
ஜடேஜா 42 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் அவர் 3 விக்கெட் எடுத்து இருந்தார். அஸ்வின் 3 விக்கெட் கைப்பற்றினார்.
115 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சை ஆடியது.
இந்திய அணிக்கு தொடக்கமே ஏமாற்றமாக இருந்தது. லோகேஷ் ராகுல் 1 ரன்னில் லயன் பந்தில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 115 ரன் எடுத்து ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.